காவிரி நீர்பிடிப்பு குடகு, மைசூரில் வெளுத்த கனமழை! கிடுகிடுவென நிரம்பும் கேஆர்எஸ், கபினி அணைகள்!
பெங்களூர்: கர்நாடகாவில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளான குடகு மற்றும் மைசூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருவதால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளுக்கான நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் கோடை காலத்தில் காவிரி ஆறு வறண்ட நிலையில் இருந்தது. தற்போது கர்நாடகாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் மைசூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே காலத்தில் வெறும் 0.67 மி.மீ மழை பெய்த நிலையில் தற்போது 32.34 மி.மீ மழை பெய்திருக்கிறது. குடகு மாவட்டத்தில் இந்த ஆண்டு தற்போது வரை 23.48 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வெறும் 12.35 செ.மீ மழைதான் தற்போதைய காலத்தில் பதிவானது.

இதேபோலவே மைசூர் மாவட்டத்திலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. மைசூர் நகரின் பல பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனையடுத்து காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் மட்டம் 80 அடியைத் தாண்டியதாக இருக்கிறது.
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கபினி அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டும் நிலைமை உள்ளது.
கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடப்பட வேண்டும். தற்போது இரு அணைகளிலும் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா முழுமையாக திறந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு.
காவிரி மேலாண்மை ஆணையமானது, தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டும் கர்நாடகா திறந்துவிட மறுத்து வருகிறது. தற்போது இயற்கையே கை கொடுத்து வருவதால் கர்நாடகா அரசால் தட்டிக் கழிக்க முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications