ராபிடோ பைக்கில் பயணித்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்.. பெங்களூரில் கொடூரம்!
பெங்களூர் : கர்நாடகா மாநிலம் பெங்களூரில், ராபிடோ பைக் டாக்ஸி புக் செய்து பயணித்த பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ராபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த நிலையில், அவர் குடிபோதையில் நிதானம் இன்றி இருந்த நிலையில், அவரை ராபிடோ டிரைவர் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரும், அவரது நண்பரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராபிடோ பைக் டாக்ஸி
பெங்களூரில் கடந்த 25ஆம் தேதி இரவு கேரளாவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பிடிஎம் லேஅவுட் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள மற்றொரு நண்பர் வீட்டுக்குச் செல்வதற்காக ராபிடோ பைக் டாக்ஸி புக் செய்துள்ளார். அதன்படி, அந்த ராபிடோ டிரைவர் வந்து அந்த இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு அவர் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்றுள்ளார்.

பலாத்காரம்
அப்போது, அந்த இளம்பெண் அதிகமாக குடித்திருந்ததால் சுயநினைவில் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த ராபிடோ பைக் டாக்ஸி டிரைவர், அந்த இளம்பெண்ணை தனது தோழி ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அந்த ராபிடோ டிரைவரின் மற்றொரு நண்பரும் வந்துள்ளார். இருவரும் அப்பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

கடுமையான வலி
அடுத்த நாள், அந்தப் பெண் சுயநினைவுக்குத் திரும்பியபோது கடுமையான உடல் வலியை உணர்ந்துள்ளார். தனது அந்தரங்கப் பகுதிகளிலும் கடுமையான வலியை உணர்ந்த அப்பெண், அங்கிருந்து தப்பித்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

3 பேர் கைது
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணையை தொடங்கிய எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார், பாலியல் பலாத்காரம் செய்த ராபிடோ ஓட்டுநரும், அவரது நண்பரும், அந்த வீட்டில் இருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராபிடோ டாக்ஸி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பெங்களூரில் 21 வயதான டப்பிங் கலைஞர் ஒருவர், ராபிடோ பைக்-டாக்சி ஓட்டுநர் ஒருவர் சவாரியின் போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று போலீசில் புகார் செய்தார். டிரைவர் மற்றும் நிறுவனத்திற்கு எதிராக போலீசார் பாலியல் துன்புறுத்தல் வழக்கை பதிவு செய்தனர். ஆனால் ஆரம்பகட்ட விசாரணையில், அப்பெண் பொய்யான புகாரை அளித்தது தெரியவந்தது குறிப்பிடத்தகக்து.












Click it and Unblock the Notifications