தலையை சுற்றி மூக்கை தொடும் மதுரை, பெங்களூர் வந்தே பாரத்! ஆனால் திருச்சி மக்கள் ஹேப்பி
பெங்களூர்: சென்னையில் இருந்து சுமார் 742 கிலோ மீட்டர் தூரம் செல்லும் நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் 8 மணி 50 நிமிடத்தில் போகும் போது, பெங்களுரில் இருந்து வெறும் 419 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள மதுரைக்கு செல்லும் வந்தே பாரத் 8.15 நிமிடத்தில் போகும் என்பது எந்த வகையில் நியாயம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். ஓசூர் , சேலம் வழியாக நேராக திண்டுக்கல் வர வேண்டிய ரயில் திருச்சியை சுற்றி செல்கிறதாம். இதனால் திருச்சி பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது இதுதவிர எழும்பூரில் இருந்து நெல்லை வந்தே பாரத் ரயிலும், கோவை-பெங்களூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும் என மொத்தம் 5 வந்தே பாரத் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூர் கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த 2 வந்தே பாரத் ரயில்களை, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

புதிய வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களிலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களிலும் பயணம் செய்கிறது. ஆனால் புதிய வந்தே பாரத் 8 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணிக்க முடியும் என்பதால் நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
ஆனால் மதுரை -பெங்களுர் வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை வெறும் 419 கிலோ மீட்டர் தூரம் தான் உண்மையான தூரம். ஆனால் ஓசூர் வழியாக வராமல் ஆந்திர மாநிலத்தை சுற்றி ஜோலார்பேட்டை வழியாக வருவதால், சேலத்தை அடைவதற்கே பெங்களூர் செல்லவே 4 மணி நேரம் ஆகும் என்பதால் இந்த ரூட்டை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி சேலத்தில் இருந்து நேரடியாக கரூர் வழியாக திண்டுக்கல் வராமல், கரூரில் இருந்த திருச்சி சென்று அங்கிருந்து பின்னர் திண்டுக்கல் வந்து, அதன்பிறகு மதுரை வருவதால் தாமதம் ஆகும் என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நேரடியாக மதுரையில் இருந்து திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் சென்றால், அதிகபட்சம் ஆறு மணி நேரத்தில் போய்விட முடியும். எனவே ஆறு மணி நேரத்தில் போக வேண்டிய பெங்களூருக்கு 8 மணி நேரம் ஏன் பயணித்து போக வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ள நெட்டிசன்கள், மதுரைக்கும், திண்டுக்கல்லும் போக வேண்டிய நாங்கள் ஏன், ஆந்திராவைச் சுற்றிக்கொண்டு வந்து, கடைசியில் திருச்சிக்கு யூடர்ன் அடித்துவிட்டு பின்னர் மதுரைக்கு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்
மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் (20671) வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் தினமும் அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து காலை 6:01க்கு புறப்பட்டு 6:50க்கு திருச்சி சென்றடையும். பின்னர் திருச்சியில் இருந்து 6:55க்கு புறப்பட்டு 8:08க்கு கரூருக்கும், 8:32க்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கும் , 9:15க்கு சேலம் ரயில் நிலையத்திற்கும், மதியம் 12:50 மணிக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கும், 1:00 மணிக்கு பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கும் செல்கிறது. மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம் ஆகும்
மறுமார்க்கமாக பெங்களூர் மதுரை வந்தே பாரத் ரயில் மதியம் 1:30க்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55க்கும், மாலை 4:50 க்கு சேலம் ரயில் நிலையத்திற்கும், 5:38 க்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கும், 5:58 க்கு கரூர் ரயில் நிலையத்திற்கும், இரவு 7:20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கும், 9:08க்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கும், இரவு 9:45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கும் வந்து சேருகிறது. பெங்களூர் மதுரை வந்தே பாரத் ரயிலின் மொத்த பயண நேரம் 8 மணி 15 நிமிடம் ஆகும்.
இந்நிலையில் மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தமிழ்நாட்டிற்குள்ளேயே சுற்றி செல்வதால், பயண நேரம் அதிகரிப்பதுடன், மதுரை மக்களுக்கு நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலை ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி ரயிலை இயக்கினால் மதுரை பெங்களூர் இடையே செல்லும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேநேரம் மதுரை பெங்களுர் வந்தே பாரத் ரயில் ஆந்திரா மற்றும் திருச்சியை சுற்றி செல்வதால், மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதி மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ரயில் செல்லும் முதல் நாளான செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி அடுத்த ஒரு வாரத்தில் 400 முதல் 500 டிக்கெட்டுக்கள் அப்படியே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது.
எனவே தெற்கு ரயில்வே இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓசூர் வழியாக ரயிலை இயக்குவதுடன், திருச்சியை சுற்றி செல்லாமல் மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி ரயிலை மாற்றி இயக்கினால், காரில் செல்லும் ஐடி ஊழியர்கள் பலர் அதை அப்படியே பார்க்கிங்கில் போட்டு விட்டு ரயிலில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்கள்.
அதேநேரம் திருச்சிக்கு வந்தே பாரத் அவசியம். எனவே திருச்சி-பெங்களூர் இடையே புதிதாக வந்தே பாரத் இயக்கினால் திருச்சி சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.












Click it and Unblock the Notifications