"மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன்".. வைகோவுக்கு ஷாக் கொடுத்த சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன்
சென்னை: மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன் என சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் தெரிவித்துள்ளார். மதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளதால் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என செந்தில் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இவர், திமுகவிலேயே தற்போது இணைந்துவிட்டதாக கூறியுள்ளதால், மதிமுக எம்எல்ஏவின் பலம் 1 ஆக குறைந்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட உயர்நிலைக் குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆனால், இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை சீர்காழி மதிமுக எம்.எல்.ஏ செந்தில் செல்வன் புறக்கணித்தார்.
சட்டமன்றத் தேர்தலின் போது மதிமுக, திமுக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் சீர்காழி மற்றும் கடையநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. எனினும், உதயசூரியன் சின்னத்தில் நின்றதால், அக்கட்சி எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
அண்மைக்காலமாகவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக கூட்டணி குறித்து பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்தார். தங்களை விட பலம் குறைந்த பிற கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும், தன்மானத்தைச் சமரசம் செய்து கொண்டுதான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததாக அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.
மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ அண்மையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார். அப்போது தன் தொகுதிக்கு உட்பட்ட சில கோரிக்கைகளையும் முதலமைச்சர் விஜய்யிடம் முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து தான் வைத்த கோரிக்கைகளை அடுத்த நாளே முதலமைச்சர் விஜய் செயல்படுத்த துவங்கிவிட்டார் என துரை வைகோ கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் வைகோவிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அடுத்தகட்டமாக விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மதிமுக தலைமை, திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தவெக கூட்டணியில் இணைய திட்டமிட்டு வருவதால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தன் இரு எம்.எல்.ஏ-க்களையும் அவர்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்யும்படி கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் இதனை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாகவே அவர் உயர்நிலைக் குழு கூட்டத்தைப் புறக்கணித்தார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன், தான் தற்போது ம.தி.மு.க-வில் இல்லை என்றும், அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
"கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சீர்காழி தனித் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்ற சூழல் நிலவியதால், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தோம். அதற்காக, நான் வகித்து வந்த மாதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அப்போதே விலகி, திமுகவின் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
தற்போது நான் மதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத காரணத்தால், அக்கட்சியின் கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. நான் தற்போது திமுகவின் அடிப்படை உறுப்பினராக நீடிப்பதால், இனிவரும் காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகத் எனது பணிகளை திமுகவிலேயே தொடரப் போகிறேன். சீர்காழி தொகுதி மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றுவேன்" என்று கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நாளை மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications