பெங்களூரில் ரூ.51 லட்சம் நகைக்காக 5 கோடி மதிப்புள்ள பங்களாவை இழந்த வேலைக்கார பெண்
பெங்களூர்: பெங்களூர் ஜே.பி.நகர் 2-வது ஸ்டேஜ் பகுதியில் 59 வயதாகும் ஆஷா ஜாதவ் வசித்து வருகிறார். இவருக்கு கணவர், மகன், மகள் என யாரும் இல்லை. இவருடைய வீட்டில் 15 வருடங்களாக மங்களா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். விசுவாசமாக இருந்ததாக கருதி, மங்களாவிற்கு 5 கோடி மதிப்புள்ள பங்களாவை ஆஷா தந்துள்ளார். அப்படிப்பட்ட ஆஷாவிடம் ரூ.51 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடியதால், இப்போது ரூ.5 கோடி பங்களாவை இழந்துவிட்டார் வேலைக்கார பெண் மங்களா. திருட்டில் ஈடுபட்டதால் இப்போது சிறையில் கம்பியும் எண்ணுகிறார்.
வேலைக்காரர்கள் விசுவாசமாக இருப்பதை பார்த்து, சில வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சில வேலைக்கார பெண்கள் துரோகம் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக வாழ்க்கை துணை இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் தனியாக வாழும் பெண்களுக்குத்தான் வேலைக்கார பெண்கள் துரோகம் செய்வது நடக்கிறது. பெங்களூரிலும் நடந்ததும் அப்படியான ஒரு சம்பவம் தான்.

பெங்களூரு ஜே.பி.நகர் 2-வது ஸ்டேஜ் பகுதியில் 59 வயதாகும் ஆஷா ஜாதவ் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு கணவர், மகன், மகள் என யாரும் இல்லை. இதனால் ஆஷா தனியாக வசித்து வந்த நிலையில், வயோதிகம், உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்த, தன் தாயை கவனித்துக்கொள்ள 15 ஆண்டுக்கு முன், மங்களா என்ற பெண்ணை ஆஷா வேலைக்கு சேர்த்திருந்தார். மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவை சேர்ந்தவர் தான் இந்த மங்களா. மகளா ஆஷாவின் தாயை நன்கு கவனித்துக் கொண்டதால், மங்களா மீது ஆஷாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தாய் இறந்த பின்னரும் அவரை வேலைக்கு வைத்திருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த 10-ந் தேதி ஆஷா வீட்டில் இருந்த ரூ.51.5 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி திருட்டுப்போய் இருந்தது.
இதுகுறித்து ஜே.பி.நகர் போலீசில் ஆஷா புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷா வீட்டில் திருடியதாக வேலைக்கார பெண் மங்களாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.51½ லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. அவரையில் சிறையிலும் அடைத்தனர். இந்த நிலையில், ரூ.51½ லட்சம் நகைக்காக ரூ.5 கோடி மதிப்புள்ள பங்களாவை வேலைக்கார பெண் மங்களா பறி கொடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
விசாரணையில் வெளிவந்த தகவலின் படி, யாருமே இல்லாமல் தனியாக வசித்து வரும் ஆஷாவுக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக ஆஷா வீட்டில் மங்களா வேலை செய்ததால், அவரை தனது மகள் போன்று பாவித்து வந்துள்ளார். தனது தாய் இறந்த பின்பு ஜே.பி.நகர் 2-வது ஸ்டேஜில் உள்ள ரூ.5 கோடி மதிப்பிலான வீட்டை மங்களாவுக்கு ஆஷா தானமாக எழுதி கொடுத்திருந்தார். ஆனால் மங்களாவோ, காதலனுடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சியில் சுற்றுவதும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.40 லட்சம் வரை இழந்துள்ளார்.
மேலும், மங்களாவுக்கு பணம் தேவைப்பட்டதால், ஆஷா வீட்டு பீரோவில் இருந்து ரூ.51.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி விற்பனை செய்ய தொடங்கி உள்ளார். பின்னர் பீரோவின் சாவி காணாமல் போய் விட்டதாக ஆஷாவிடம் மங்களா கூறியிருக்கிறார். தீபாவளிக்கு முன்பாக தங்க நகைகளை அணிய வேண்டும் என்று, கடந்த 10-ந் தேதி மாற்று சாவி மூலமாக பீரோவை திறந்து ஆஷா பார்த்த போது தான் நகைகள் திருடப்பட்டது தெரியவந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் மங்களாவின் நடவடிக்கைகள் சரியில்லாமல் போயிருக்கிறது. இதனால் ஆஷாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு புகாரும் அளித்திருந்தார். போலீசாரும் மங்களாவை கைது செய்து திருடிய தங்கம், வெள்ளியை மீட்டதுடன், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சிறையில் அடைத்திருக்கிறார்.
ஆஷா தான்ஏற்கனவே எழுதி கொடுத்த ரூ.5 கோடி மதிப்பிலான பங்களாவையும், மங்களா பெயரில் இருந்து தனது பெயருக்கு (பவர்) ஆஷா மாற்றிக் கொண்டிருக்கிறார். உரிமையாளரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதால் ரூ.5 கோடி பங்களாவை மங்களா இழந்து சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.












Click it and Unblock the Notifications