அம்மா என்ன செய்றாங்கன்னு கூட விவரம் அறியாத புள்ளைங்க! 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் இரு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு வயது 27. இவருக்கு திருமணமாகி பிரிண்டா என்ற 4 வயது மகளும் புவன் என்ற 1 வயது மகனும் இருந்தனர்.

விஜயலட்சுமியின் கணவர் பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 4 பேரும் பெங்களூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று முன் தினம் மாலை தனது இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக தெரிகிறது.
மேலும் விஜயலட்சுமி இன்னொரு அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விஜயலட்சுமிக்கு கணவருடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் கர்நாடகாவில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. தும்கூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரிதா (23). இவர்களுக்கு கவுஷிக் என்ற 3 வயது மகளும், யுக்தி என்ற 2 வயது மகளும் இருந்தனர்.
திருமணமான நாளில் இருந்து வரதட்சிணை கேட்டு சரிதாவை அவரது கணவரும் மாமியாரும் துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சரிதாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவம் நடந்த அன்றும் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் சரிதாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரு குழந்தைகளையும் கொன்ற சரிதா, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சந்தோஷ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவியும் குழந்தைகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
அது போல் கடந்த ஜூலை மாதம் இதே கர்நாடகா மாநிலத்தில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்தம்மா (33). இந்த தம்பதிக்கு அக்பினா (8), அவனி (6) என்ற இரு மகள்களும் ஆர்யா (4) என்ற மகனும் இருந்தனர்.
இந்த தம்பதி ஆடு மேய்ப்பதற்காக பல்லாரி மாவட்டம் பரதனஹள்ளி கிராமத்திற்கு சென்றிருந்தனர். அங்கு ராகவேந்திராவுக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு மேய்த்து தொண்டிருந்த போது கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு சித்தம்மா அங்கிருந்து வெளியேறி குட்டையில் 3 குழந்தைகளையும் வீசி கொன்றுவிட்டு அதே குட்டையில் தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications