வெற்றியுடன் “தலைவலி”.. “எனது தந்தையே முதலமைச்சர் ஆகனும்”.. காங்கிரஸை சோதிக்கும் சித்தராமையா மகன்
பெங்களூரு: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் தனது தந்தைக்கே முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மகன் பேசி இருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையாவின் மகன் யதிந்திரா தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்து உள்ளார்.

அப்போது அவர், "பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற நாங்கள் எதையும் செய்வோம். கர்நாடகா மாநிலத்தில் நலன் கருதி எனது தந்தை முதலமைச்சர் ஆக வேண்டும். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். எனது தந்தை சித்தராமையா வருணா தொகுதி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
கர்நாடகத்தில் நாங்கள் ஆட்சியமைப்போம் என்பதில் மிகுந்த நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம். ஒரு மகனாக எனது தந்தை சித்தராமையாவை இந்த முறையும் முதலமைச்சராக பார்க்க ஆசைப்படுகிறேன். அவர் முதலமைச்சராக பதவியேற்றால், பாஜக ஆட்சியில் நிலவிய ஊழலை ஒழித்துக்கட்டுவார். பாஜக ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட குழப்பங்களை சரிகட்டுவார்." என்று தெரிவித்தார்.
கர்நாடக தேர்தல் அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பே அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும் டிகே சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி தொடங்கிவிட்டது. நேற்றுகூட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டிகே சிவக்குமார் அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார்.
கர்நாடகாவில் அதிக வாக்கு சதவீதத்தை வைத்து இருக்கும் சமூகங்களில் ஒன்றான வொக்காலிகர் ஜாதியை சேர்ந்தவர் டிகே சிவக்குமார். அந்த சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தெற்கு கர்நாடக பகுதிகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றால், அதை காட்டி தனக்கு முதலமைச்சர் பதவியை கே சிவக்குமார் கேட்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சமூக பலத்தை கடந்து மேலும் சில விசயங்கள் டிகே சிவக்குமாருக்கு சாதகமாக உள்ளன. குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டிகே சிவக்குமார் போன்றோர் ஆரம்பகாலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பயணித்தவர்கள். ஆனால், சித்தராமையா ஆரம்பகால காங்கிரஸ்காரர் அல்ல. 2006 ஆம் ஆண்டில்தான் மஜதவில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார்.
இதையும் ஒரு அளவீடாக எடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் - மஜத ஆட்சி கவிழ்ப்பு, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட ஹிஜாப், ஹலால் சர்ச்சைகள், நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பணிகள் என அனைத்திலும் பம்பரமாக சுழன்று உழைத்தவர் டிகே சிவக்குமார் என்பதால் தொண்டர்கள் ஆதரவு அவருக்கே இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரம் முன்னாள் முதலமைச்சர், மூத்த தலைவர்களுடனான நெருக்கம், போன்றவற்றால் சித்தராமையாவும் முதலமைச்சர் பதவிக்கான லாபியில் இறங்கி இருக்கிறார். மக்கள் முடிவு எதுவாகினும், யார் முதலமைச்சர் என்ற முடிவை எடுக்க வேண்டியது டெல்லி காங்கிரஸ் தலைமைதான்.












Click it and Unblock the Notifications