பெங்களூரில் தொடங்கியது தமிழ் புத்தக திருவிழா.. தாய்மொழி கல்வியால் சாதித்தேன்: மயில்சாமி அண்ணாதுரை
பெங்களூர்: தமிழ் படித்ததால்தான் விண்வெளி துறையில் என்னால் சாதிக்க முடிந்தது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெங்களூரில் நடைபெற்று வரும் தமிழ் புத்தக திருவிழாவின்போது தெரிவித்தார்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தக விழா நேற்று தொடங்கியது. பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நடந்த விழாவை விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் புத்தக திருவிழா குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: புதிய முயற்சியாக புதிய நம்பிக்கையாக இன்று ஆரம்பித்து உள்ள முதல் தமிழ் புத்தக திருவிழா உண்மையில் நம்பிக்கை தருகிறது.

தமிழ்
தமிழ் எனது அடையாளம், தமிழ் எனது முகம் என ராம்பிரசாத் மனோகர் உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார். எனது முகவரி தமிழகம் என்றாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பெங்களூருவில்தான் உள்ளேன். நான் எழுதிய 7 புத்தகங்களும் பெங்களூருவில் வைத்து தான் எழுதப்பட்டது.

வேர்கள்
நமது தாய்மொழியை மறக்க கூடாது. வேர்களாக இருக்கும் மொழியை மறக்கக் கூடாது. அந்த மொழி நமது தாய், அந்த தாய்மொழி தான் உயரத்தை தொட உதவி உள்ளது. நான் முழுக்க படித்தது எனது சொந்த ஊரான கோவையில்தான். நான் படித்தது தமிழ் வழி கல்வி ஆகும். தமிழில் படித்துவிட்டு விண்வெளி துறையில் சாதித்தீர்களா என நிறைய பேர் என்னிடம் கேட்டுள்ளனர்.

தமிழில் படித்ததால்தான்
தமிழில் படித்ததால்தான் நான் சாதித்தேன் என கூறினேன். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசியிருந்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூர் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம் பிரசாத் மனோகர் பேசுகையில், தமிழ் புத்தக திருவிழாவை தலைமை ஏற்று நடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்த விழா குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தக திருவிழா
இந்த விழா ஒரு புத்தக திருவிழா மட்டும் இல்லை. நமது உறவுகளை புதுப்பித்து கொள்ளும் விழா. கர்நாடகத்தில் வாழ்கிற தமிழர்கள் நான் தமிழ் பேசுகிறேன் என சொல்லவே தயங்குகிறார்கள். இந்த விழாவை தலைமை தாங்குவதற்கு கூட சிலர் தயங்கினர். ஆனால் நான் தலைமை ஏற்கிறேன் என்றேன். தமிழ் என்பது எனது முகம், தமிழ் என்பது எனது அடையாளம்.

முகவரியை மறைத்து வாழ்வது
தமிழ்தான் எனது முகவரி. எனது முகவரியை மறைத்து வாழ வேண்டிய தவறை நான் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன். நான் தைரியமாக சந்தோஷமாக ஆர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். தமிழ் மொழி உணர்வு பூர்வமானது. தமிழ் மொழியில் படித்து எப்படி ஐஏஎஸ் ஆனீர்கள் என பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் தமிழ் படித்ததால்தான் ஐஏஎஸ் ஆனேன் என பெருமையாக சொல்லிக் கொள்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications