சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை! பைக்கில் போக முடியாது.. தடை விதித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பெங்களூர்: சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் கர்நாடக பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், இருசக்கர வாகன ஒட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தக் கூடாது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கான காரணங்கள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை கர்நாடக பகுதியில் திறந்துவிடப்பட்டுள்ளதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பறக்கின்றன. எக்ஸ்பிரஸ்வே சாலை என்பதால் இந்த சாலையில் பயணம் எப்படி இருக்கிறது என்ற ஆர்வத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் சென்று பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது சில நேரங்களில் பைக்கில் செல்பவர்களுக்கு ஆபத்தானதாகவும் மாறிவிடுகிறது.

இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள பங்கராபேட் தாலுகாவில் மிகப்பெரிய விபத்து ஒன்று நடைபெற்றது. பைக் ஒன்று விபத்தில் சிக்கியதில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து, விபத்துக்களை தடுக்கும் விதமாக இருசக்கர வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எக்ஸ்பிரஸ் வே சாலைக்குள் ராங் ரூட்டில் பைக் ஒன்று உள்ளே புகுந்தது. அப்போது அந்த பைக் மற்றொரு கார் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர். எக்ஸ்பிரஸ் வே சாலையில் பைக்குகள் செல்வதற்கு நாடு முழுக்க தடை உள்ளது. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் அறிவுறுத்துக்கிறோம். அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் வரை செல்லும் திறனுடன் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன.
எனவே இந்த சாலைகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உகந்தது இல்லை. தங்களின் உயிரையும் பணயம் வைப்பதோடு மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்துகிறார்க்ள். எனவே இந்த சாலையை இருசக்கர வாகன ஒட்டிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக ரோந்து வாகனங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சாலையின் நுழைவு பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும். அறிவுறுத்தல் போர்டுகளும் வைக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும்
மொத்தம் 260 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் தற்போது 68 கிலோ மீட்டர் தொலைவு அதிகாரப்பூர்வமற்ற முறையில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக பகுதியில் உள்ள 71 கிலோ மீட்டர் சாலை பணிகளை நெடுஞ்சாலை ஆணையம் முடித்துள்ளது. இந்த சாலையின் மீதமுள்ள பகுதிகள் ஹோசகொட் முதல் ஸ்ரீபெரும்பதூர் வரை உள்ளது.
ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என இரு மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த சாலை இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக பகுதியில் திறக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக ஹோஸ்கோட், மலூர், கேஜிஎப் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல முடியும் என்பதால் அதிக அளவு இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள்.
சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை - பெங்களூர் இடையே நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்து வருகிறார்கள். தென்னிந்தியாவில் உள்ள இரு முக்கியமான நகரங்கள் என்பதால் தொழில், வேலை, கல்வி என பல்வேரு காரணங்களுக்காக இரு நகரங்களுக்கும் இடையே பயணிகள் பயணம் செய்கிறார்கள். சாலை மார்க்கமாகவும், ரயில், விமானம் மூலமாகவும் பயணிகள் பயணித்து வருகிறார்கள்.
இரு நகரங்களுக்கு இடையேயான போகுவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து பெங்களூர் வரை அதிவிரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த சாலை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக பகுதிகளில் மட்டுமே பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. நிலம் கையகபடுத்துவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் தமிழக பகுதிகளில் சாலை முடிவு பெறாமல் உள்ளது.
4 மணி நேரமாக குறையும்
கர்நாடக பகுதியில் எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகள் முடிந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு சாலை திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பிறகு போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் பயணிகளின் பயண நேரம் மிச்சமாகும். இதன் காரணமாக பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த சாலை திட்டத்தை எதிர்பார்த்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications