92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர்
பெங்களூர்: நமது நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாகவே நீட் மூலமாகவே மருத்துவச் சேர்க்கை நடந்து வருகிறது. இருப்பினும், நீட் தேர்வு உருவாக்கும் அழுத்தம் அச்சம் காரணமாக மாணவர்கள் சிலர் மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாள் சர்ச்சையால் ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு முதலே நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இருப்பினும், சில ஆண்டுகளாகவே நீட் வினாத்தாள் தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு நீட் வினாத்தாள் லீக் ஆனது பூதாகரமான நிலையில், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை
இதனால் மன உளைச்சலில் மாணவர்கள் மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் கலாபுரகி மாவட்டத்தில், நீட் தேர்வெழுதிய 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பாக்கியஸ்ரீ என அடையாளம் காணப்பட்ட இந்த மாணவி, தனது பி.யு.சி தேர்வுகளில் 92 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தார். மே 2ம் தேதி நீட் தேர்வை எழுதியிருந்த பாக்கியஸ்ரீ, தனது குடியிருப்பில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நீட் ரத்து
இதுவரை தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அண்மைக் காலங்களில் நீட்-யுஜி 2026 தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகப் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மே 16ம் தேதி ராஜஸ்தானில் ஒரு மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவர் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டதாகவும், சுமார் 650 மதிப்பெண்கள் எதிர்பார்த்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.
விசாரணை
இது தொடர்பாக உத்யோக் நகர் எஸ்.ஹெச்.ஓ ராஜேஷ் குமார் கூறுகையில், "இறந்த மாணவர் பிரதீப் மேக்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஜுன்ஜுனுவின் குதா கௌத்ஜி பகுதியில் உள்ள கனிகா கி தானி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது இரண்டு சகோதரிகளுடன் சிகாரில் தங்கியிருந்து, ஒரு தனியார் பயிற்சி மையத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகி வந்துள்ளார். இந்த வழக்கில் நாங்கள் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்" என்றார்.
என்ன நடந்தது
முன்னதாக, நீட்-யுஜி 2026 தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, தேசியத் தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. இது 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களைப் பாதித்தது. மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பின்னர் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் மருத்துவ நுழைவுத் தேர்வு கணினி அடிப்படையிலான வடிவத்திற்கு மாறும் என்றும் அறிவித்தார்.
கோரிக்கை
நீட் முறைகேடுகளைத் தடுக்கக் கணினி அடிப்படையிலான தேர்வு என்பது நல்ல மாற்றம் தான் என்றாலும் இந்தாண்டு நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கவே செய்கிறது. இருப்பினும், இதனால் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுத்துவிடக்கூடாது என்பதே பெற்றோர்கள், ஆசிரியர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications