மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த பின்னணியில் PFI அமைப்பு.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்
பெங்களூர்: கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டும் என்பது மாணவிகளின் சுயமான முடிவு இல்லை என்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அறிவுரையின் படி இந்த மாணவிகள் செயல்படுகின்றனர் எனவும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளது.
கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.

தடை உத்தரவு செல்லும்
கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தீர்ப்பளித்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சீருடை என்பதில் ஹிஜாப் வராது
இந்த வழக்கு விசாரணையின் போது கர்நாடக அரசு தர்ப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஸு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதங்கள் வருமாறு:- உடுப்பியில் உள்ள கல்லூரி கடந்த 2013 ஆம் ஆண்டு மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்ற முடிவை எடுத்தது. இந்த சீருடை என்பதில் ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர்.

மாணவிகள் ஏற்பு
மனுதாரர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு பியூ கல்லூரியில் சேர்ந்தனர். துவக்கத்தில் சீருடை விதிகளை ஏற்றுக்கொண்ட மனுதாரர்களான மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில், கடந்த நடப்பு ஆண்டில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சமூக வலைத்தளத்தில் ஒரு இயக்கத்தை தொடங்கியது. மத உணர்வுகளின் அடிப்படையில் கிளர்ச்சியை உருவாக்கும் நோக்கில் இந்த இயக்கம் வடிவமைக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கும்
நாங்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது இந்த மாணவிகளின் தன்னிச்சையான செயல்பாடாக இல்லை. சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக அவர்கள் உள்ளனர். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அறிவுரையின் படி இந்த மாணவிகள் செயல்படுகின்றனர். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மட்டும் அரசு ஹிஜாப் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்காவிட்டால் மத நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கும். இது மாநில அரசு தனது கடமையை செய்ய தவறியதாக அமைந்திருக்கும்'' என்றார்.

அனுமதி கிடையாது
மேலும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ''பள்ளிகளில் ஹஜாப் அணிய தடை விதித்தது மத நடுநிலையான உத்தரவு ஆகும். காவித்துண்டு அணியவோ ஹிஜாப் அணியவோ அனுமதி கிடையாது. ஹிஜாப் தடைக்கு எதிராக திடீரென மாணவிகள் கொதித்தெழுவது அவர்களின் ஐடியா கிடையாது. 2004-2021 ஆம் ஆண்டு இது ஒரு பிரச்சினையாக எழவில்லை'' என்று வாதிட்டார். மேலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிராக போலீசார் பதிவு செய்த குற்றப்பத்திரிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.












Click it and Unblock the Notifications