கஞ்சா செடி வளர்த்த பெங்களூர் கபிள்ஸ்.. ரீல்ஸ் போட்டு போலீஸில் சிக்கிய தரமான சம்பவம்
பெங்களூர்: சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்த தம்பதி ஒருவர் தங்களது வீட்டு தோட்டத்தில் இருந்து ரீல்ஸ் போட்ட நிலையில், அந்த தோட்டத்தில் கஞ்சா செடி இருப்பதைக் கண்டறிந்த போலீஸார் அவர்களை அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக ரீல்ஸ் மோகம் இளைஞர்கள் மற்றும் தம்பதிகளிடையே மிகவும் அதிகரித்துள்ளது. லைக்ஸ்களை அள்ளிக் குவிப்பதற்காக வித்தியாசமான முறைகளில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து போஸ்ட் செய்து வருகின்றனர். சில சமயங்களில் லைக்ஸ்களுக்காக ஆபத்தான ரீல்ஸ்களை செய்து சிக்கலில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் போட்டு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் விதவிதமான ரீல்ஸ்களை சமூக வலைதளங்களில் பலரும் போடுகின்றனர். அந்த வகையில், பெங்களூர் தம்பதி தங்களது தோட்டத்தில் இருந்து ரீல்ஸ் போட்டு போலீஸில் வசமாக சிக்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூர் எம்.எஸ்.ஆர். நகரில் வசித்து வருகிறார் சாகர் குருங். 37 வயதான சாகருக்கு ஊர்மிளா குமாரி என்ற மனைவி உள்ளார். இருவரும் பெங்களூரில் மகிழ்ச்சியாக வசித்து வந்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாம்ச்சி என்ற பகுதிதான் இவர்களுடைய சொந்த ஊர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
சாகர் பெங்களூர் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது மனைவி ஊர்மிளா குமாரி வீட்டை நிர்வகித்து வந்துள்ளார். வீட்டு வேலைகளை செய்து முடித்த பின்னர் சும்மாவே இருப்பதால் போர் அடித்த நிலையில், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
இதையடுத்து, நாமும் வீடியோ போடலாம் என்று ஆசைப்பட்டு சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்துள்ளார். புகைப்படங்களை போஸ்ட் செய்வது, ரீல்ஸ் போடுவது என தீவிரமாக இறங்கியுள்ளார். நாளடைவில், வீட்டில் நடக்கும் விசேஷங்கள், தனக்குப் பிடித்த விஷயங்கள் எல்லாவற்றையும் வீடியோவாக வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் தான் வசிக்கும் வீட்டின் தோட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு போலீஸில் வசமாக சிக்கியுள்ளார். அந்த வீடியோவில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் உடனடியாக போலீசார் அந்த பெங்களூர் தம்பதியை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் கூறுகையில், சாகர், ஊர்மிளா தம்பதி வீட்டில் சோதனை செய்தோம். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, முறையாக பதில் அளிக்கவில்லை. அந்த தோட்டத்தில் இருந்த இரண்டு செடிகளில் இருந்து கஞ்சா செடிகள் பிடுங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தீவிர விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா செடி வளர்த்ததை ஒப்புக்கொண்டனர்.
அப்போது, கஞ்சா செடிகளை குப்பையில் வீசியிருப்பதை எங்களிடம் காண்பித்தனர். இதையடுத்து, அந்த செடிகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்த தம்பதி போலீஸாரை கண்டதையடுத்து கஞ்சா செடிகளை அழிக்க முயற்சி கொண்டுள்ளனர். கஞ்சா செடிகள் விற்பனை செய்யும் நோக்கத்தில் வளர்த்துள்ளனரா என்ற சந்தேகம் உள்ளது. எனவே, அவர்களிடமிருந்து செல்போன் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications