பசுக்கள் ஏற்றி வந்த இளைஞர் கொலை.. தலைமறைவான கும்பலை ராஜஸ்தானில் தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
பெங்களூர் : கர்நாடகாவில் பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்கள் மீது 'பசு பாதுகாவலர்கள்' என்று கூறிக்கொண்டு புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்குதல் நடத்தியதில், இஸ்லாமிய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தப்பியோடிய புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டம் சாத்தனூர் காவல் நிலையத்தின் வழியாக பசுமாடுகள் இறைச்சிக்காக கடத்தப்படுவதாக ராஷ்ட்ரா ரக்சனா படை என்ற அமைப்பை நடத்தி வரும் புனித் கெரேஹள்ளிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புனித் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சாத்தனூர் போலீஸ் நிலையத்தின் அருகே சென்று காத்திருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. லாரியை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனை செய்தபோது அதில் 16 மாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புனித் உள்பட 5 பேரும் சேர்ந்து மாடு கடத்தி வந்ததாக கூறி லாரியில் இருந்த இத்ரேஷ் பாஷா, இர்பான் மற்றும் டிரைவர் சையத் ஜாகீர் ஆகியோரை கடுமையாகத் தாக்கினர்.
இதற்கிடையே அருகிலேயே காவல் நிலையம் இருந்தததால் உடனடியாக போலீசார் அங்கு வந்ததால் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் சையத் ஜாகீர் என்பவரை பிடித்தனர். புனித் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சையத் ஜாகீர் மற்றும் அவரோடு வந்தவர்கள் மீது பசு மற்றும் கால்நடை வதை சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் தலைமறைவானவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் சையத் ஜாகீருடன் வந்த மண்டியா மாவட்டத்தை சேர்ந்த இத்ரேஷ் பாஷா என்பவர் இந்தத் தாக்குதலில் இறந்திருப்பது தெரியவந்தது. புனித் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் வந்தவுடன் அனைவரும் ஓடினர். ஆனால், இத்ரேஷ் பாஷா, தாக்குதலில் மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் புனித் கீரேஹள்ளி உள்ளீட்ட 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவான கும்பல், தங்கள் மொபைல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு மகாராஷ்டிரா வழியாக குஜராத் செல்ல முயன்றுள்ளனர்.
இடையிடையே புனித் கெரேஹள்ளி தனது மொபைல் போனை ஆன் செய்ததால் போலீசாருக்கு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது. அவர்களின் நடமாட்டைத் தீவிரமாக கண்காணித்து வந்த கர்நாடகா போலீசார் ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்று, புனித் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். புனித்தின் கூட்டாளிகள் கோபி, பவன்குமார், சுரேஷ்குமார் மற்றும் பில்லிங் அம்பிகர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
"குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவையும் விசாரிக்கப்படும்" என்று ராமநகர எஸ்பி கார்த்திக் ரெட்டி கூறியுள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எந்தவொரு வன்முறைச் செயலையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், இதுபோன்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அதுபற்றி குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications