‛ஜெய் பஜ்ரங்பலி’ கோஷத்தோடு ஓட்டு போடுங்க! கர்நாடகாவில் பிரதமர் மோடி அறிவுரை!அதிர்ந்த மேடை.. ஏன்?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தண்டிக்க வேண்டும். இதனால் தேர்தலில் ஓட்டளிக்கும்போது பொதுமக்கள் அனைவரும் ‛ஜெய் பஜ்ரங்பலி' எனும் கோஷத்தோடு காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி ‛ஜெய் பஜ்ரங்பலி' என தொடர்ந்து கோஷமிட்டது அரங்கத்தை அதிர செய்தது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த கோரிக்கைக்கு பின்னால் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பதில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க தேவையான 113க்கும் அதிகமான இடங்களை பிடிக்க இருகட்சிகளும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசாரத்தின்போது இருகட்சி தலைவர்களும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை விஷப்பாம்பு போன்றவர் என கூறியதோடு, அவரை நெருங்கினால் மரணம் ஏற்படும் எனவும் தெரிவித்தது சர்ச்சையானது. இதையடுத்து பாஜகவினர் மல்லிகார்ஜூன கார்கேவை விமர்சனம் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக தான் இருகட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தவுடன் பஜ்ரங்தளம் அமைப்பு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பஜ்ரங்தள அமைப்பினர் காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தர கன்னடாவில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் என்னை வெறுக்கின்றனர். என்னை பற்றி அவதூறு செய்கின்றனர். ஏனென்றால் நான் ஊழலுக்கு தடையாக இருக்கிறேன். என்னை பற்றி தவறான விஷயங்களை கூறி வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய கலாசாரம் கொண்ட காங்கிரஸ் கட்சியை தண்டிக்க வேண்டும்.

கர்நாடகாவில் உள்ள மக்கள் காங்கிரஸின் இத்தகைய செயல்பாட்டை ஏற்றுகொள்வார்களா? ஒருவரை அவதூறாக சித்தரிக்க விரும்புவார்களா? இத்தகைய நபர்களை கர்நாடகா மக்களான நீங்கள் மன்னிப்பார்களா? இவர்களை தண்டிப்பீர்களா?. இவர்களை தண்டிக்க வாக்குச் சாவடியில் ஓட்டு போடும் பட்டனை அழுத்தும்போது ‛ஜெய் பஜ்ரங்பலி' என கூறி ஓட்டு போடுங்கள்'' என்றார்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மேடையில் நின்றபடி இரு கைகளையும் உயர்த்தி ‛‛பஜ்ரங்பலிக்கு'' என 3 முறை கூற அங்கிருந்தவர்கள் செல்போனில் பிளாஷ் லைட்டை ஆன் செய்து‛‛ஜெய்'' என கோஷமிட்டனர். மேலும் ‛‛பாரத் மாதா கீ'' என பிரதமர் மோடி கூறி பாஜகவினர் ‛‛ஜெய்'' என கூறினர். அதன்பிறகு ‛‛வந்தே'' என பிரதமர் மோடி கூறி மக்கள் ‛‛மாதரம்'' என உற்சாகமாக கூறினர். இதனால் பொதுக்கூட்டம் நடந்த அரங்கம் அதிர்ந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications