எலி வளையை தோண்ட தோண்ட வந்த ₹10 லட்சம் தங்கம்.. பெங்களூரு நகைக்கடையில் புகுந்து விளையாடிய கில்லாடி!
பெங்களூர்: பெங்களூருவில் பிரபலமான நகைக்கடையில் திருட்டு நடந்துள்ளது.. ஆனால், பூட்டிய கடையில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.. கடையின் பூட்டு உடைக்கப்படவில்லை.. சுவர்கள் எதுவும் துளைக்கப்படவில்லை.. கேமராவில் எந்த நபரும் தென்படவில்லை.. ஆனாலும், ₹10 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மாயமானது எப்படி? அந்த மாஸ்டர் மைண்ட் கொள்ளையனும் சிக்கிவிட்டார் எப்படி?
கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் கால்டெக்ஸ் வட்டம் அருகே இயங்கி வருகிறது பிரபல "விஷ்வாஸ் ஜூவல்லரி".. இங்கு சம்பவத்தன்று வழக்கம்போல வியாபாரம் முடிந்தது.. கடை உரிமையாளர் விஷ்வாஸ் மற்றும் ஊழியர்களும், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். மறுநாள் காலையில் கடையை திறந்தபோது, மொத்த பேருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

பிரபல நகைக்கடை திருட்டு
கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்கம், வைர நகைப் பெட்டிகளில் இருந்து சுமார் 50 கிராமிற்கும் அதிகமான மதிப்புமிக்க ஆபரணங்கள் காணாமல் போயிருந்தன.. இதில் 10 தங்க மோதிரங்கள், 3 காஸ்ட்லி தங்கச் சங்கிலிகள், வைர நகைகள் அடங்கும். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாயாகும்.
திடீரென கடைக்குள் தங்கம், வைரம் மாயமாகியிருப்பதை கண்டு அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.. அத்துடன் குழம்பியும் போனார்கள்.. காரணம், கடைக்கதவின் பூட்டுகளோ, ஷட்டர்களோ உடைக்கப்படவில்லை. கடையின் கூரையிலோ அல்லது சுவரிலோ எந்த துளையும் இல்லை... எந்த நபருமே உள்ளே நுழையாதபடி அனைத்துமே காணப்பட்டது. ஆனாலும் எப்படி ₹10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மட்டும் காற்றுடன் காற்றாகக் கரைந்து போயிருக்கும் என்று மண்டை காய்ந்து போனார்கள்.
கேமராவில் சிக்கிய எலி
10 லட்சம் மதிப்புள்ள நகை காணவில்லை என்பதுமே பதறிப்போன கடை உரிமையாளர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கடையை சுற்றிலும் ஆய்வு செய்தனர்.. போலீசாருக்கும் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை... அதனால் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர்.. கேமராவிலும் யாருமே தென்படவில்லை. இதனால் போலீசுக்கும் இந்த விஷயத்தில் குழப்பம் வந்துவிட்டது..
அப்போதுதான் அங்கிருந்த ஊழியர் ஒருவர், நகைகளின் விலைக் குறியீட்டு அட்டைகள் (Price Tags) மட்டும் தரையில் ஆங்காங்கே உதிர்ந்து கிடப்பதை கவனித்தார்.. உடனடியாக சிசிடிவி கேமராவில் அந்த இடத்தை மட்டும் ஜூம் செய்து பார்த்தனர்.. அப்போது ஒரு குட்டி எலி, டேபிள் மேலே ஏறி, நகைப் பெட்டியில் இருந்த தங்க மோதிரங்கள், தங்க சங்கிலிகளை தன்னுடைய கூர்மையான பற்களால் கவ்விக்கொண்டு ஒவ்வொன்றாக இழுத்து செல்வது பதிவாகியிருந்தது.
சிறுக சிறுக சேர்த்த 10 லட்சம் ரூபாய் நகைகள்
இதை பார்த்ததுமே மொத்த பேரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.. நகையிலிருந்த காகித அட்டையின் வாசனைக்கோ அல்லது சுவைக்கோ ஆசைப்பட்ட அந்த எலி, அட்டையை கடித்தபடியே ₹10 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் சேர்த்து தனது வளைக்குள் இழுத்துச் சென்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீசாரும், கடை ஊழியர்களும், நகைகளை கவ்விச்சென்ற எலியின் பாதையிலேயே பின் தொடர்ந்தனர்.. அப்போதுதான் கடையில் இருந்த பெரிய எலி வளையை பார்த்தனர்.. அந்த எலி வளையைத் தோண்டியபோது, 10 தங்க மோதிரங்கள், 3 தங்கச் சங்கிலிகள், வைர நகைகள் என அத்தனையும் ஜொலித்துகொண்டிருந்தன.. எந்த நகைக்கும் எந்த சேதாரமும் இல்லை.. அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டன
ஹை-டெக் திருட்டு வைரல்
இரவு நேரங்களில் சிறுக சிறுக சேகரித்து, இந்த நகைகைளை எல்லாம் எலி, தன்னுடைய வளைக்குள் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது.. நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டதால் கடை உரிமையாளரும், ஊழியர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்..
வழக்கமாக குற்றவாளிகளை தேடித்தான் போலீசார் அலைவார்கள்.. ஆனால், முதன்முறையாக ஒரு எலியின் வளைக்குள்ளிருந்து ₹10 லட்சம் நகைகளை மீட்டுள்ளது, காவல்துறையையே வியப்பில் ஆழ்த்தி வருகிறதாம்..
எலியின் இந்த "ஹை-டெக் திருட்டு" சிசிடிவி வீடியோவை பார்த்து நெட்டிசன்களும் வியப்பில் மூழ்கி வருகிறார்கள்...!!


Click it and Unblock the Notifications
