எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் ஒலி.. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் அருகே சோக காட்சிகள்
பெங்களூர்: 17 வருடம் விடாமல் போராடி, 18வது வருடமான இந்த வருடத்தில் தான் பெங்களூர் ஆர்சிபி அணி ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்றது. இத்தனை வருட காத்திருப்பு, ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏக்கமாக இருந்தது. நேற்று வெற்றி பெற்றதை பெரிய அளவில் பெங்களூர் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது நடந்த நெரிசல் சம்பவம் கலங்க வைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ்கள் சென்ற வண்ணம் உள்ளது.ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டபடி உள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் 18 ஆண்டு கால விராட் கோலியின் கோப்பை ஏக்கம் முதல் முறையாக தணிந்துள்ளது. நீண்ட கால கனவு நனவான சந்தோஷத்தில் மைதானத்தில் மண்டியிட்டு நன்றி செலுத்தினார் விராட் கோலி. வெற்றி பெற்ற பெங்களூர் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது. இந்த வெற்றியை பெங்களூரு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் நேற்று இரவு முதல் கொண்டாடி வருகிறார்கள்..

சின்னசாமி ஸ்டேடியம்
நேற்று இரவு தீபாவளியை போல் பெங்களூர் நகரம் ஜொலித்தது. எங்கு திரும்பினாலும் வாணவேடிக்கையும், கொண்டாட்டங்களும் களைகட்டி இருந்தன. தாங்களே வென்றது போன்ற மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தினார்கள். அஹமதாபாத்தில் போட்டி முடிந்து, ஆர்சிபி வீரர்கள் இன்று மாலை பெங்களுர் வந்தனர். பெங்களுரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இலவச பாஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க இலவசமாக பாஸ் வழங்கியது. பாஸ் கிடைத்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மற்ற ரசிகர்கள் சின்னசாமி ஸ்டேடியத்தை சுற்றி குவிந்தனர். அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40 பேர் வரை காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆம்புலன்சுகள் விரைந்தன
காயம் அடைந்தவர்களை ஏற்றி செல்வதற்காக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சின்னசாமி ஸ்டேடியத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தன. எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் ஒலி தான் கேட்டது.
இதை பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் கலங்கி போனார்கள். உற்சாகமாக உள்ளே கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், வெளியில் இப்படியான சோக சம்பவம் நடந்தது உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பாதியில் வெளியேறினார். நடந்த சம்பவத்திற்காக கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கோருவதாக கூறினார். கூட்ட நெரிசலை தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications