யூடியூபர்னா எது வேணா செய்வீங்களா.. பெங்களூர் பற்றி வீடியோ பகிர்ந்த பெண்ணுக்கு போலீஸ் தந்த தண்டனை
பெங்களூர்: பெங்களூரில் ரவுடிகள் அட்டூழியம் அதிகரித்துள்ளது என்று உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோவை பெங்களூரில் நடந்ததாக கூறி வீடியோ வெளியிட்ட பெண் யூடியூப் பிரபலத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தற்போது பலரும் யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் பிரபலமான பிறகு அவர்கள் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசி வம்பில் மாட்டி கொள்கின்றனர். குறிப்பாக பிரச்சனையின் காரணம் தெரியாமல் அல்லது சமூக வலைதளங்களில் உலாவும் தகவல், வீடியோ அடிப்படையில் கருத்து தெரிவித்து வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. யூடியூபராகவும், சமூகவலை தளங்களில் பிரபலமான ஒரு பெண் பெங்களூருவில் நடக்காத சம்பவத்தை நடந்ததாக கூறி தவறான வீடியோ வெளியிட்டதால் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரை சேர்ந்தவர் ஷாஜகான் ஷரீப். இவருக்கு வயது 36. பெங்களூர் அவலஹள்ளியில் வசித்து வருகிறார். யூடியூபரான இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்நிலையில் தான் இந்த மாத தொடக்கத்தில் அவர் தனது பேஸ்புக் உள்பட பிற சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியாவில், இரவில் கார் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அப்போது அந்த காரில் இருப்பவரை ஒரு கும்பல் விரட்டி கொலை செய்ய முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவை பகிர்ந்த அவர், ‛‛இது பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரில் ரவுடிகள் வெறிப்பிடித்து அலைகின்றனர்'' என்று கூறியிருந்தார்.
ஷாஜகான் சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதால் அவரது இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. ஆனால் ஒரு தரப்பினர் சந்தேகம் கிளப்பினர். இந்த சம்பவம் பெங்களூரில் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினர்.
இந்த வீடியோவை பெங்களூர் புலிகேசிநகர் போலீஸ் நிலையத்தின் சமூக வலைதள பிரிவினர் பார்த்தனர். அந்த வீடியோவின் பின்னணி பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீடியோ 2 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதும், அது பெங்களூரில் நடக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் நடந்ததும் தெரியவந்தது.
ஆனால் வீடியோவின் உண்மை தன்மை பற்றி அறியாத ஷாஜகான் பெங்களூரில் நடந்ததாக பதிவிட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூர் பற்றி தவறான தகவல்களை பரப்புவதாக கூறிய புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். அவர் மீது பிஎன்எஸ் பிரிவு 353 (பொதுமக்களுக்கு தவறான தகவலை கூறுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications