சசிகலாவை வரவேற்க தயாராகும் பரபர ரிசார்ட் - சென்னை திரும்புவது எப்போது?
பெங்களூரு: கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு ரிசார்ட் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சசிகலா முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவதற்கான உடல் தகுதி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ள அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
சசிகலா டிஸ்சார்ஜ் ஆனதைத் தொடர்ந்து, அவரை பார்ப்பதற்காக மருத்துவமனை முன்பு அமமுக.,வினர் குவிந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சசிகலாவை அழைத்து சென்ற காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் சசிகலா எங்கே தங்குகிறார், எப்போது தமிழகம் வருகிறார் போன்ற விஷயங்களை சசிகலாவின் ஆலோசனையின் பெயரில் அவரின் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல் நாளில் சசிகலா பெங்களூருவில் தங்கவைக்கப்படலாம் என தெரிகிறது. பிறகு, பெங்களூருவில் உள்ள பிரபலமான நந்தி ஹில்ஸில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சசிகலா தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், அனேகல், ஜெயா நகர், சிகிச்சை பெற்ற விக்டோரியா மருத்துவமனை அருகில் உள்ள வீடு போன்ற இடங்களில் தங்க வைக்க பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், நந்தி ஹில்ஸில் சசிகலா ஓய்வெடுக்கவே அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஒரு வார முழு தனிமைப்படுத்தலின் போது, சசிகலா வெளி நபர்களை சந்திக்க முடியுமா என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. எனினும், ஓய்வுக்கு பிறகு பிப்ரவரி 5ம் தேதியிலிருந்து 7ம் தேதிக்குள் சசிகலா சென்னை வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications