தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை..மோசமான நிலையில் பெங்களூர்..காவிரி தண்ணீர் காலி..நிலத்தடி நீர் போச்சு!
பெங்களூர்: கோடைக்காலம் இன்னும் தொடங்கப்படாத நிலையில் பெங்களூரில் முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும் இந்த குடிநீர் பிரச்சனையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர்.. கர்நாடகாவின் தலைநகரான இங்கு பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ளன. மேலும் பிரபல தனியார் நிறுவனங்கள் ஆண்டுதோறும் புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால் வருடம்தோறும் பெங்களூரை நகரில் வேலை தேடி செல்வோரின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது.

அதோடு அப்பார்ட்மென்ட்டுகளும் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியை பிடபிள்யூஎஸ்எஸ்பி எனும் பெங்களூர் குடிநீர் வநியோகம் மற்றும் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து வந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது சட்டசபையில் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் கூட காவிரியில் இருந்து பெங்களூர் மக்களுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பெங்களூரை பொறுத்தமட்டில் கோடைக்காலங்களில் குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை ஏற்படும். ஆனால் இப்போது கோடைக்காலம் தொடங்கும் முன்பே குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் இனி நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி.. பட்ஜெட்டில் அறிவித்த சித்தராமையா
குறிப்பாக பெங்களூர் நகரின் முக்கிய இடங்களாக உள்ள கேஆர்புரம், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் என்பது வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் மட்டுமே உள்ளது. அதுமட்டுமின்றி குடிநீர் வரும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுவாக இந்த 3 பகுதிகளில் நல்ல வசதி படைத்தவர்கள் வாழ்ந்து வருகின்றன. ஐடி உள்பட பல்வேறு முக்கிய அலுவலகங்களில் பணியாற்றி வருவோர் இந்த பகுதிகளில் வசிக்கும் நிலையில் அவர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதுபற்றி ஒயிட்ஃபீல்டு பகுதியில் வசித்து வரும் பத்ம விருது பெற்றவரான சுஜாதா ராமதுரை கூறுகையில், ‛‛தேசிய பசுமை தீர்ப்பாயம் வழிக்காட்தல் படி வர்த்தூர் ஏரியை அதிகாரிகள் தூர்வாரவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் திட்டமிடப்படாத வகையில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனையும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை.
இதனால் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. என் குடும்பம் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் அதிக வரி செலுத்தும் பகுதியாக மகாதேவபுரா உள்ளது. ஆனால் குடிநீர் விநியோகம் என்பது சரியில்லை. சகாரா பாலைவனத்தில் வசிப்பது போன்று மக்கள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’’ என்றார்.
மேலும் சமீபத்தில் கல்கெரே வார்டில் 60 குடியிருப்பு நலச்சங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானவர்கள் குடிநீர் பிரச்சனை பற்றி விவாதித்தனர். அப்போது 10,000 குடும்பங்கள் டேங்கர் தண்ணீரை நம்பியே வாழ்க்கை நடத்தும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு டேங்கர் தண்ணீரும் உடனடியாக கிடைப்பது. 5 நாட்கள் காத்திருந்த பிறகு தான் அதிக விலைக்கு தண்ணீர் கிடைப்பதாக தெரிவித்தனர்.
‛ரம்ஜான் உணவு திருவிழாவுக்கு தடை போடுங்க’.. பெங்களூர் தமிழ் ஏரியாவில் திடீர் போர்க்கொடி! பரபரப்பு
அதேபோல் ராமமூர்த்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் உறுப்பினர் கொச்சு சங்கர் கூறுகையில், ‛‛ஜுன் இறுதி வரை பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் காவிரி நீரை அருகே உள்ள நீர் ஆதாரங்களில் இருந்து வழங்க வேண்டும். இது மக்கள் படும் சிரமத்துக்கு ஓரளவு தீர்வாக அமையும்’’ என்றார்.
இதுபற்றி பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்திடம் கேட்டபோது, ‛‛காவிரியில் இருந்து பெங்களூருவுக்கு கிடைக்கும் தண்ணீரில் அளவு என்பது குறைவாக இருக்கிறது. இதனால் குடிநீர் சப்ளையை முறையாக மேற்கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளது.
மேலும் நீர் பாதுகாப்பு கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சந்தீப் அனிருதன் கூறுகையில், ‛‛பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கும் விடுதிகள், கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளுக்கு அதிகளவில் டேங்கர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் நீர்மட்டத்தை குறைத்துள்ளன. இதனால் தான் பெங்களூர் மக்கள் குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். அதோடு தண்ணீர் டேங்கர்களுக்கான தேவை அதிகரிக்கிறது. ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் டேங்கரை நாடுவதால் குடிநீர் பிரச்சனை தீர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.












Click it and Unblock the Notifications