ஹனி ட்ராப்.. பாலியல்.. கொலை மிரட்டல் – கர்நாடகாவை அதிரவைத்த பாஜக எம்எல்ஏ.. பாய்ந்தது வழக்கு
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் அமைச்சரும், பாஜக சிட்டிங் எம்எல்ஏவுமான முனிரத்னா மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவருடன் மேலும் ஆறு பேர் மீது கக்காலிபுரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் பாஜக நிர்வாகிகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார்கள். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இது தேசியளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அந்த மாநிலத்தின் மற்றொரு பாஜக சீனியர் நிர்வாகி மீது பாலியல் வழக்கு பாய்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகத்தில் கடந்த பாஜக ஆட்சியில், தோட்டக்கலை, திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக இருந்தவர் முனிரத்னா. சினிமா தயாரிப்பாளராகவும் உள்ள முனிரத்னா, தற்போதும் ராஜராஜேஷ்வரி நகர் தொகுதியின் பாஜக சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்தில் ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டிய புகாரில், காவல்துறை முனிரத்னாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முனிரத்னம் காவல்துறையின் கஸ்டடியில் உள்ளார். முனிரத்னம் செலவராஜ் என்ற ஒப்பந்தாரரை, "ரேணுகாசாமிக்கு நடந்தது உனக்கும் நடக்கும். எனக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை கொடுத்துவிடு." என்று கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
செலவராஜ், முனிரத்னாவுக்கு ரூ.1 லட்சம் கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால், முனிரத்னா ரூ .20 லட்சம் வேண்டும் என்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் முனிரத்னா செலவராஜின் குடும்ப உறுப்பினர்களையும் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதுகுறித்து வியாலிக்கவார் காவல்நிலையத்தில் முனிரத்னா மீது இரண்டு தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முனிரத்னா ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் முனிரத்னா மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ராம்நகர் மாவட்டம், கக்காலிபுரா காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு ரிசார்ட் உள்ளது. அங்கு வைத்து முனிரத்னா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதற்கு அவரின் ஆதரவாளர்கள் துணை நின்றதாகவும் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதை வீடியோ பதிவு செய்து முனிரத்னா பிளாக் மெயில் செய்து மிரட்டுவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு ஆண் ஒருவரை வைத்து தன்னை ஹனி ட்ராப் செய்ய முயற்சி செய்ததாகவும் அந்தப் பெண் புகார் வைத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் முனிரத்னா, விஜய்குமார், சுதாகரா, கிரண் குமார், லோஹித் கவுடா, மஞ்சுநாத் மற்றும் லோகி ஆகியோர் மீது பத்து பிரிவுகளின் கீழ் கக்காலிபுரா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாட்களில் முனிரத்னா மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. முனிரத்னாவுக்கு ஒப்பந்ததாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், பாலியல் வழக்கில் அவரை மீண்டும் கைது செய்வதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. "இது காங்கிரஸ் அரசின், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை." என்று பாஜக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications