டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!
பெங்களூர்: கடைசியாக நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது அக்கட்சி எதிர்க்கொண்ட முக்கிய பிரச்சனை யார் முதலமைச்சர் என்பதுதான். நீண்ட இழுபறிக்கு பின்னர், ஆட்சியை பாதியாக பங்கிட்டுக்கொள்ளலாம் என சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. தற்போது டி.கே.சிவகுமார் முதலமைச்சருக்காக காய் நகர்த்தி வரும் நிலையில், சித்தராமையாவின் செயல் அரசியல் கவனம் பெற்றிருக்கிறது.
அதாவது, சிவகுமார் முதலமைச்சர் ஆகிறார் எனில், சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு விருப்பம் இல்லை. இருப்பினும் தலைமை முடிவு காரணமாக சித்தராமையா அரை மனதுடன் ஓகே சொல்லியிருக்கிறார். இருப்பினும் இன்று அவர் சாதி வாரிக் கண்கெடுப்பு அறிக்கையை வாங்கியிருக்கிறார். இதன் மூலம் டி.கே.சிவகுமாருக்கு செக் வைத்திருக்கிறார்.

கர்நாடக மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் மதுசூதன் நாயக் மற்றும் அதன் உறுப்பினர்கள், பெங்களூரு விதான் சவுதாவில் வைத்து இந்த 'சமூக மற்றும் கல்விசார் கணக்கெடுப்பு' அறிக்கையை முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநிலத் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ் ஆகியோரிடம் சமர்ப்பித்தனர்.
சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்படும் நிலைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, இந்த அறிக்கை சமர்ப்பிக்கும் செயல்முறையை அவர் மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டு, முறைப்படி அதனைப் பெற்றுக்கொண்டார்.
சித்தராமையா தன்னை எப்போதுமே பின்தங்கிய வகுப்பினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் (AHINDA - அலசங்கியாட, ஹிந்துளிதவாடா மற்றும் தலித்) முகமாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர்.
அவர் தனது முதலமைச்சர் பதவிக் காலத்தின் கடைசி நேரத்தில் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டதன் மூலம், தனது கடைசி நாள் வரை தான் பின்தங்கிய மக்களின் சமூக நீதிப் போராட்டத்திற்கு உறுதியாக நின்றேன் என்ற வலுவான அரசியல் செய்தியையும், தனது அரசியல் அடையாளத்தையும் நிலைநிறுத்த முயல்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கை வெறும் நிர்வாக ரீதியான ஒப்புதலோடு மட்டும் நின்றுவிடாது. இதனை அமல்படுத்த வேண்டும் என்றால், அது மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
சித்தராமையாவைத் தொடர்ந்து அடுத்து முதலமைச்சராகப் பதவியேற்கப் போகும் நபர் டி.கே.சிவக்குமார். அவர் இந்த அறிக்கையை அமல்படுத்துவதா இல்லையா என்ற இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்.
ஏனெனில், கர்நாடகாவின் பெரும்பான்மை மற்றும் செல்வாக்கு மிக்க சமூகங்களான வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத் தலைவர்கள் (டி.கே.சிவக்குமார் உட்பட) இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமற்றது என்றும், தங்களது சமூகத்தின் மக்கள் தொகையைக் குறைத்துக் காட்டுகிறது என்றும் கூறி ஏற்கனவே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய அரசு இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டால் வொக்கலிகா, லிங்காயத் சமூகங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்; நிராகரித்தால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும்.
இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பு கடந்த 2025-ஆம் ஆண்டில் சுமார் ரூ. 635 கோடி செலவில் நடத்தப்பட்டது. 54 கேள்விகளைக் கொண்டு, மாநிலத்தின் மொத்தமுள்ள 6.26 கோடி மக்கள் தொகையில் சுமார் 5.9 கோடி மக்களை இந்த ஆய்வு உள்ளடக்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை உடைத்து, தகுதியான சமூகங்களுக்குக் கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப் போராட்டத்திற்கு இந்தத் தரவுகள் மிக முக்கிய ஆதாரமாக இருக்கும் என சித்தராமையா தரப்பு நம்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications