‛மதவாத ஒழிப்பு படை’.. கர்நாடகா போலீசில் புதிய விங் அறிமுகம்.. உள்துறை அமைச்சர் அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் மதம் சார்ந்த பிரச்சனைகளில் நடக்கும் கொலையால் பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது. இதனை கண்காணித்து தடுக்கும் வகையில் மாநிலத்தில் மதவாத எதிர்ப்பு படையை உருவாக்க உள்ளதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். உள்துறை அமைச்சராக ஜி பரமேஸ்வர் செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவை எடுத்து கொண்டால் சமீபகாலமாக மதம் சார்ந்த பிரச்சனைகள் நடந்து வருகின்றன. இது மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்குகின்றன.

இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த போலீஸ் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் கூட ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்து விடுகின்றனர்.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் மதவாத எதிர்ப்பு படையை (Anti Communal Wing)உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கர்நாடகாவின் உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‛‛விரைவில் மதவாத எதிர்ப்பு படையை கொண்டு வர உள்ளோம். வரக்கூடிய வாரங்களில் இது செயல்பாட்டுக்கு வரும். இந்த படைபிரிவில் உள்ளவர்கள் போலீசாருடன் இணைந்து செயல்படுவார்கள்'' என்று கூறியுள்ளார்.
இந்த மதவாத எதிர்ப்பு படை என்பது நக்சல் ஒழிப்பு படைப்பிரிவை போல் செயல்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மதவாத கொலைகளை தடுக்கவும், மதவாதம் சார்ந்த பிரச்சனைகளை கையாளவும், பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் பணியையும் இந்த மதவாத எதிர்ப்பு படை மேற்கொள்ள உள்ளது.
கர்நாடகாவை எடுத்து கொண்டால் தட்சின கன்னடா மற்றும் உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மதம் சார்ந்த பிரச்சனைகளில் கொலைகள், தாக்குதல்கள் உள்ளிட்டவை அடிக்கடி நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சுகாஷ் ஷெட்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். மே 1ம் தேதி சூரத்கல்லில் மங்களூர் பஜ்பே பஸ் நிலையத்தில் நின்ற சுகாஷ் ஷெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் உயிரிழந்தார்.
விசாரணையில் சுகாஷ் ஷெட்டி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர் என்பதும், பாஜகவினருக்கும் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரத்கல்லில் பிரவீன் நெட்டார் என்ற பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி பாசில் என்பவர் படுகொலை செய்யப்பட்டது. இந்த பாசில் கொலை வழக்கில் சுகாஷ் ஷெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மாநிலத்தில் மதவாத எதிர்ப்பு படை என்பது தொடங்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வர் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
