தற்கொலை நகராகும் பெங்களூர்.. 2022 முதல் 2025 நவம்பர் வரை எத்தனை பேர் தெரியுமா? ஷாக் டேட்டா
பெங்களூர்: பெங்களூர் நகரில் 2025 ஜனவரி மாதம் முதல் 2025 நவம்பர் மாதம் வரை மொத்தம் 2,364 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மொத்தம் 9,450 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி சராசரியாக நாள் ஒன்றுக்கு 7 பேர் வரை தற்கொலை செய்துள்ளதாகவும், அதிகபட்சமாக 8,148 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்கொலை என்பது எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது. ஆனாலும் கூட பலரும் தற்கொலை முடிவை கையில் எடுத்து உயிரை மாய்த்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருக்கும் பலருக்கும் தங்களின் பிரச்சனைகளை பேசி தீர்க்கலாம் என்ற மனப்பக்குவம் இல்லாதது வருத்தமானது தான்.

குறிப்பாக தற்போது இளம் வயதினர் கூட தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் நகரில் தற்கொலை கடந்த 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை குறித்த திடுக்கிட வைக்கும் டேட்டா வெளியாகி உள்ளது.
பெங்களூரில் தற்கொலை செய்து கொள்வோர் குறித்து கர்நாடகா மேல்சபையில் எம்எல்சி கே கோவிந்தராஜ், கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வர் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பெங்களூரில் கடந்த 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை மொத்தம் 9,450 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி ஒரு நாளைக்கு 7 பேர் தற்கொலை செய்கின்றனர்.
இதில் அதிகபட்சமாக 8,148 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை எண்ணம் வந்தால் பொதுமக்கள் அதிகளவில் தூக்கிட்டு தான் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதற்கு அடுத்தப்படியாக 740 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். மேலும் 2024 பேர் கட்டங்களில் இருந்து கீழே குதித்து உயிரை விட்டுள்ளனர்.
ஆண்டு வாரியாக பார்த்தால் கடந்த 2022ம் ஆண்டில் 2,313 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,370ஆக அதிகரித்தது. 2024ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,403 ஆக கூடியது. இப்போது 2025 நவம்பர் மாதம் வரை 2,364 பேர் தற்கொலை செய்துள்ளதாக போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது'' என்று கூறியுள்ளார்.
இதுபற்றி மைசூர் மருத்து கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மனநல மருத்து துறையின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ரவீஷ் தற்கொலை எண்ணத்துக்கான காரணத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தற்கொலை என்பது மனநலம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனையாகும். முதலில் வீட்டில் இருக்கும் மின்விசிறி அல்லது அதன் கொக்கிகள் எட்டாத உயரத்தில் இருக்கும். இப்போது அது மாறிவிட்டது. அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்துகள் இதற்கு முன்பு எளிதாக கிடைக்காது. ஆனால் இப்போது அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது. இதுவும் தற்கொலை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
அதேபோல் மக்கள் தற்போது சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். சமீபகாலமாக மனஅழுத்தத்தில் இருப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இது இன்னொரு காரணமாகும். மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறமை இல்லாதவர்கள் பயந்து போய் தற்கொலை செய்கின்றனர்'' என்றார்.
அதேபோல் பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையின் Tele MANAS-யின் சீனியர் ரெடிடென்ட் டாக்டர் கிரண் கூறுகையில், ‛‛குடும்ப பிரச்சனை, உறவு முறையில் வரும் பிரச்சனை, படிப்பு மற்றும் நிதி சார்ந்த பிரச்சனைகள் தான் தற்கொலைக்கு முதன்மையான காரணங்களாக உள்ளது. யாருக்காவது தற்கொலை எண்ணம் வந்தால் அவர்கள் உடனடியாக ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். தனியாக இருப்போர் என்றால் தங்களுக்கு நெருக்கமான உறவுகளுடன் சிறிது காலம் தங்கலாம். இது தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட வாய்ப்பாக அமையும்'' என்றார்.












Click it and Unblock the Notifications