கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை.. இம்முடிவை நிறுத்த வைக்க வேண்டும்.. சிபிஎம்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்ற கேள்வி எழுவதாக கூறிய பெ.சண்முகம், கரூர் வழக்கு விசாரணை நடந்து வரும் போது இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும் என்றும் விமர்சித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியோர், இளைஞர்கள் என்று பலரும் உயிரிழந்தது தேசிய அளவில் பேசுபொருளானது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கரூர் அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமானார். இதனால் கரூர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் முதல்வர் விஜய் 10 மாதங்களுக்கு பின் கரூருக்கு நாளை செல்ல உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட கரூர் பக்கம் செல்லாத விஜய், இம்முறை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நாளை கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களில் இருந்து முதற்கட்டமாக 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது.
முதல்வர் விஜய்யின் இந்த முடிவுக்கு தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முதல்வர் விஜய் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்ற கேள்வி வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications