வார லீவு கிடையாது.. மேனேஜர் கொடுத்த தொடர் தொல்லையால் ஊழியர் எடுத்து விபரீத முடிவு.. உயிரே போச்சே
பெங்களூர்: மைசூரில் வார விடுமுறை கொடுக்காமல், மற்றவர்கள் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மேனேஜர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததோடு, உடல் நலக்குறைவால் 2 நாட்கள் விடுமுறையில் இருந்த சமயத்தில் வேலையை விட்டு நீக்கியதால் பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மைசூர் மாவட்டம் ஹின்கல் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்வரி (வயது 45). இவரது கணவர் பெயர் அசோக். நாகேஷ்வரி கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். புராடெக்ட் புரோமோட்டர் என்ற பொறுப்பில் நாகேஷ்வரி பணி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் நாகேஷ்வரி உடல் நலக்குறைவால் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு கணவர் அசோக் போன் செய்தார். வீட்டில் இருந்த நாகேஷ்வரி போனை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தும் எந்த பதிலும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அசோக் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் நாகேஷ்வரி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு நாகேஷ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அசோக் கதறி அழுதார்.
இதுபற்றி விஜயநகர் போலீசில் நாகேஷ்வரின் கணவர் அசோக் புகார் செய்தார். அப்போது டோலி என்ற மேனேஜர் கொடுத்த டார்ச்சரால் தான் மனைவி நாகேஷ்வரி தற்கொலை செய்து இருக்கலாம் என்று குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து போலீசார் நாகேஷ்வரின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பாக நாகேஷ்வரி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், ''சூப்பர் மார்க்கெட்டில் நான் பணியாற்றி வந்தேன். பெங்களூரில் இருக்கும் மேனேஜர் டோலி என்பவர் என்னுடைய பணியை மேற்பார்வை செய்வார். அவர் தொடர்ந்து பணி ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார்.
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு என்னை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். வார விடுமுறை தருவது இல்லை. நான் விடுமுறை கேட்டால் என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதில் இன்னொருவரை அந்த பொறுப்பில் அமர்த்துவதாக கூறினார். அதோடு பலமுறை என்னை வேலையை விட்டு செல்லும்படி தொல்லை அளித்தார். 2 நாட்களாக உடல்நலக்குறைவால் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தேன். என்னை பணியில் இருந்து நீக்கியதாக கூறினார். இதனால் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன்'' என்று உருக்கமாக கூறியிருந்தார்.
இதையடுத்து விஜயநகர் போலீசார் நாகேஷ்வரின் மேனேஜர் டோலி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகேஷ்வரியை தற்கொலை செய்ய தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
