‛ஈகோ’வை விட்டு ஒழுக்கமாக நடங்க.. மகாகாந்தி வழக்கில் நடிகர் விஜய் சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்
மகாகாந்தி உடனான பிரச்சனையில் ‛ஈகோவை கைவிட்டு ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்’ என உச்சநீதிமன்றம் நடிகர் விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் வழங்கி உள்ளது.
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் தன்னை இழிவாக பேசி தாக்கியதாக துணை நடிகர் மகா காந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் விஜய் சேதுபதி கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், ‛‛நடிகர் விஜய்சேதுபதி கட்டுப்பாடுடன் நடந்திருக்க வேண்டும். ஈகோவை கைவிட்டு இருக்க வேண்டும். இருவரின் தரப்பிலும் தவறுகள் உள்ளன. இதனால் இருவரும் பேசி சமரசம் மேற்கொள்ள வேண்டும்'' என அட்வைஸ் கூறிய உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனையை பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள மார்ச் 2ம் தேதியை நிர்ணயம் செய்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் நிதானமாக இருநடிகர்களுக்கும் அட்வைஸ் வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
ஹீரோ என்று இல்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர் பட்டாளத்தை விஜய் சேதுபதி உருவாக்கி வைத்துள்ளார்.

விஜய் சேதுபதி - மகாகாந்தி பிரச்சனை
இந்நிலையில் தான் கடந்த 2021ல் துணை நடிகர் மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூர் விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது விஜய் சேதுபதி அவரை தாக்கியதாக மகா காந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‛‛2021 நவம்பரில் நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அவரை பாராட்டி கைக்குலுக்கியபோது அவர் என்னை இழிவுப்படுத்தி தாக்கினார். அவர் மீது மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் சேதுபதியை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதற்கிடைய வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது பெங்களூரு விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கிகொண்ட விவகாரம் என்பது சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல. இதனால் இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான புகாரை ரத்து செய்து உத்தரவிட்டது. மாறாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம். அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது விஜய் சேதுபதிக்கு சிக்கலை கொடுத்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதையடுத்து விஜய் சேதுபதி தரப்பில் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பிவி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வேளையில் நீதிபதிகள் நடிகர் விஜய் சேதுபதிக்கு சில அறிவுரைகளை வழங்கி பிரச்சனையை முடித்து கொண்டு இருவரும் ஒன்றாக ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டும் என கூறினார்.

பொறுப்பான நபராக..
இந்த வழக்கில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறுகையில், ‛‛நீங்கள்(விஜய் சேதுபதி) ஒரு நடிகராக இருக்கிறீர்கள். உங்களின் குரல் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும். நீங்கள் சொல்வது பொதுமக்களிடம் நன்கு பதியும். பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட நடிகராக இருக்கும் நீங்கள் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும். பொறுப்பான நபராக நடந்து கொள்ள வேண்டும்.

ஈகோவை விட்டு
இந்த வழக்கு என்பது குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இழுத்து செல்வதற்கு ஏற்ற வழக்கு அல்ல. இருவர் தரப்பிலும் சில தவறுகள் உள்ளன. சுயமரியாதையை பேணும் வகையில் இதனை முடித்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனால் தீர்வை நீங்களே ஏற்படுத்த வேண்டும். ஈகோவை கைவிட்டு சமரசம் செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள்'' என அறிவுறுத்தினார்.

மார்ச் 2ல் சமரசம்
இதை இருதரப்பும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து மார்ச் 2ம் தேதி மார்ச் 2ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் mediation-க்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மார்ச் 2வது வாரத்தில் ஹோலி வருகிறது. இருவரும் ஒன்றாக ஹோலி கொண்டாட இது வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.












Click it and Unblock the Notifications