பெங்களூரில் டிச.1 முதல் 10 வரை தமிழ் புத்தகத் திருவிழா! நாள்தோறும் மாலையில் கவியரங்கம் -பட்டிமன்றம்!
பெங்களூர்: வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு பெங்களூரில் தமிழ் புத்தகத் திருவிழா நடைபெறவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை 2ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் மதிப்புறு தலைவர் பேரா.முனைவர் கு.வணங்காமுடி செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ் புத்தகத் திருவிழா: ''2022ஆம் ஆண்டு பெங்களூரில் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முதலாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றதற்கு தமிழ் ஊடகங்கள் தான் முக்கிய காரணம். அந்த ஊடகத்துறையின் துணையோடு 2ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா டிச.1 முதல் 10ஆம் தேதி வரை பெங்களூரில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிடுயூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் நடத்தப்படவிருக்கிறது. இந்த திருவிழாவில் மொத்தம் 27 அரங்குகள் அமைக்கப்படவிருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்களுக்காக நடத்தப்படும் இந்த விழாவில் முதல்முறையாக கன்னட நூல்களும் இடம்பெறும்.'
தினேஷ் குண்டுராவ்: ''டிச.1ஆம் தேதி மாலை 3 மணிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர்.வி.ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடக்கும் தொடக்கவிழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை தொடக்கி வைக்க இருக்கிறார். சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத், பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி. பி.சி.மோகன், தி இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் தலைவர் லட்சுமண், செயலாளர் என்டி ரங்காரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். ''
இலக்கிய மாலை நிகழ்ச்சி: ''டிச.3ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்புமலரை சுற்றுலாத்துறை இயக்குநரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் வி.ராம்பிரசாத் மனோகர் வெளியிடுகிறார். தினந்தோறும் இலக்கிய மாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், பி.வீரமுத்துவேல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இலக்கியவாதிகள் அப்துல்காதர், கவிஞர் அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, பார்த்திபராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசவிருக்கிறார்கள்.''
கர்நாடக தமிழ் ஆளுமை விருதுகள்: ''டிச.10ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் நிறைவுவிழாவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ.விஸ்வநாதன் கலந்து கொண்டு, கர்நாடகத்தில் தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் 15 பேருக்கு கர்நாடகத் தமிழ் ஆளுமை விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். அந்தவிழாவில், தமிழறிஞர் குணாவுக்கு கர்நாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப்படும். புத்தகத் திருவிழாவைமுன்னிட்டு நடத்தப்படும் சிறந்த நூல்களுக்கான போட்டியில் வெற்றிபெறும் நூல்களுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. ''
ரூ.1 லட்சம் பரிசு: ''பொதுமக்கள், மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. தமிழ்மரபுவிளையாட்டுகள், தமிழ் மரபு தின்பண்டங்கள் திருவிழாவில் இடம்பெறும்.''

''தமிழ்ப் புத்தகத் திருவிழாவிற்கு பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலரும் வருகை தரவிருக்கிறார்கள் என்றார். பேட்டியின் போது சிறப்புமலர்க்குழு பொறுப்பாளர் புலவர் கி.சு.இளங்கோவன், தமிழ் மொழித்திறன் போட்டிக்குழு பொறுப்பாளர் புலவர் மா.கார்த்தியாயினி, தமிழ் மரபு விளையாட்டுக்குழு பொறுப்பாளர் இம்மாக்குலெட் அந்தோணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.''












Click it and Unblock the Notifications