எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம்
பெங்களூர்: தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்கான 3 நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு வெள்ளி வாள் கோவிலுக்கு வழங்கினார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தங்கவாள் ஒன்றை இந்த கோவிலுக்கு வழங்கிய நிலையில் விஜய், வெள்ளி வாள் வழங்கி உள்ளார். அந்த வெள்ளி வாள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தான் 3 நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய் இன்று அங்கிருந்து புறப்பட்டார். ஜனாதிபதி திரெளபதி முர்மு, காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தியை விஜய் சந்தித்து பேசினார். அதன்பிறகு பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.

இன்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் விஜய் கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் விமான நிலையத்திற்கு சென்று இறங்கினார். கர்நாடகா அரசு சார்பில் அமைச்சர் யுடி காதர், விஜய்யை வரவேற்றார். விமான நிலையத்தில் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விஜய் காரில் ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
அதன்பிறகு உடனடியாக விஜய் காரில் விமான நிலையத்தில் இருந்து கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். தமிழக போலீசார் மற்றும் கர்நாடகா போலீசார் மற்றும் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்தனர். மதியம் 3.30 மணி அளவில் விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். கோவில் மரபுபடி சட்டையை கழற்றிவிட்டு சிவப்பு நிற சால்வையை உடல் மீது போர்த்தியபடி விஜய் சென்றார்.
விஜய் சென்ற சமயத்தில் மழை பெய்தது. இதனால் அவருக்கு குடைபிடிக்கப்பட்டது. கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.. கோவில் அருகே அவரை பார்க்க குவிந்தவர்களை பாரத்து கைகூப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு விஜய் கோவிலுக்கு சென்று மூகாம்பிகை உள்பட அனைத்து தெய்வங்களை வழிபாடு செய்தார்.
ஒரு கிலோ 1 கிலோ 600 கிராம் எடையிலான வெள்ளி நீளமான வாளை, விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இந்த வாள் இனி மூகாம்பிகை கோவிலில் நடக்கும் பூஜைகளின்போதும் இடம்பெற வேண்டும் என்று விஜய் அர்ச்சகரிடம் கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றுள்ளனர். 1984ம் ஆண்டு கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்த எம்ஜிஆர் தங்க வாளை காணிக்கையாக வழங்கினார். 2004ம் ஆண்டில் ஜெயலலிதா இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அவர்களை தொடர்ந்து தான் விஜய் இந்த கோவிலுக்கு வந்துள்ளார். எம்ஜிஆர் தங்கவாள் ஒன்றை கோவிலுக்கு வழங்கி இருந்தார். அந்த பாணியில் விஜய் வெள்ளி வாள் ஒன்றை கோவிலுக்கு வழங்கி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications