கமல்ஹாசனையா சீண்டுறீங்க.. கன்னட அமைப்பினர் மீது பாய்ந்த வழக்கு.. பெங்களூர் போலீஸ் அதிரடி
பெங்களூர்: தமிழ் தாய் கன்னடத்தின் தாய் என்று பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால் ‛தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் கமல்ஹாசனை சீண்டிய கன்னட அமைப்பினர் பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‛தக் லைஃப்'. இந்த திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். அதில் கமல்ஹாசன் மொழி தொடர்பாக பேசியதை கர்நாடகாவை சேர்ந்தவர்கள் சர்ச்சையாக்கி உள்ளனர்.
அதாவது கமல்ஹாசன் பேசுகையில், ‛‛ராஜ்குமாரின் (சிவராஜ்குமாரின் தந்தை)குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக தான் எனது பேச்சை தொடங்கும் போது உயிரே.. உறவே.. தமிழே என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்'' என்றார்.
நடிகர் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். போட்டோ, உருவபொம்மைகளை எரித்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.முதல்வர் சித்தராமையா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல் மன்னிப்பு கேட்காததால்‛தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் ஓடாது என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் கமல்ஹாசனை சீண்டிய கன்னட அமைப்பினர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28 ம் தேதி இரவு பெங்களூர் பசவேஸ்வரா நகர் கேஎச்பி ரோட்டில் உள்ள பவித்ரா பாரடைஸ் சர்க்கில் அருகே கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ‛நம்ம கருநாட யுவ சேனை' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைப்பின் தலைவர் ரவிக்குமார் தலைமையில் கமல்ஹாசனுக்கு எதிராக கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் போஸ்டரை சாலையில் தீவைத்து எரித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கு பணியில் இருந்த காவலர் போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கன்னட அமைப்பினர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் சட்டப்பிரிவு 270 (பொதுமக்களுக்கு இடையூறு செய்தல்) மற்றும் 283 (பொதுவழியில் தடையை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications