30 ஆண்டு மர்மத்திற்கு விடை! மைக்கேல் ஜாக்சனுக்கு இணையான பாப் ஸ்டார் டுப்பாக் கொலை வழக்கில் தீர்ப்பு
பெங்களூர்: உலக ராப் இசையின் முடிசூடா மன்னனாகக் கொண்டாடப்பட்ட Tupac Shakur சுட்டுக் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்களை உலுக்கிய இந்த வழக்கில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நீதிமன்ற நடுவர் குழு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டிய முன்னாள் ரவுடி கும்பல் தலைவரான 63 வயது டுவேன் கீத் டேவிஸ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

யார் இந்த துபாக் ஷகூர்? என்ன நடந்தது?
நியூயார்க்கில் 1971-ல் பிறந்த துபாக், 1990-களின் தொடக்கத்தில் தனது ராப் பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் உச்சக்கட்ட புகழ்பெற்றார். வெறும் பாடல் வரிகளாக மட்டுமல்லாமல், கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறை, சமூக அநீதி மற்றும் காவல் துறையின் அத்துமீறல்களுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்தவர். மைக்கேல் ராப் உலகில் கொண்டாடப்பட்டார்.
செப்டம்பர் 7, 1996 அன்று லாஸ் வேகாஸில் மைக் டைசனின் குத்துச்சண்டை போட்டியைப் பார்த்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, சிக்னலில் நின்ற இவரது கார் மீது பக்கத்து காரில் இருந்து சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த துபாக், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 25-வது வயதிலேயே உயிரிழந்தார்.
30 ஆண்டுகள் மர்மமாக நீடித்த வழக்கு
அவ்வளவு பெரிய பிரபலம் சுட்டுக் கொல்லப்பட்டும், பல ஆண்டுகளாக கொலையாளிகள் யார் என்ற விவரம் துலங்காமல் இருந்தது. துபாக் உண்மையில் இறக்கவில்லையோ?, போலீசார் உண்மையை மறைக்கிறார்களா? என உலகம் முழுவதும் பல சதியாலோசனை வதந்திகள் பரவின. நேரடி சாட்சிகள் பேசப் பயந்ததும், தடயங்கள் சேகரிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளுமே வழக்கு இத்தனை ஆண்டுகள் தாமதமாகக் காரணம் என்று கூறப்படுகிறது.
சுயசரிதை புத்தகமே சுருக்குக் கயிறானது!
இந்த வழக்கில் முக்கிய திருப்பமே குற்றவாளியான டுவேன் டேவிஸ் செய்த ஒரு முட்டாள்தனம்தான். அவர் துப்பாக்கியால் சுடவில்லை என்றாலும், காருக்குள் அமர்ந்து கொண்டு சதித்திட்டம் தீட்டி ஆயுதத்தைக் கொடுத்தது அவர்தான்.
2019-ஆம் ஆண்டு டேவிஸ் வெளியிட்ட 'காம்ப்டன் ஸ்ட்ரீட் லெஜண்ட்' என்ற சுயசரிதை புத்தகத்திலும், பல நேர்காணல்களிலும், அன்று இரவு துபாக் ஆட்கள் என் அண்ணன் மகனைத் தாக்கினர்.. அதற்குப் பழிவாங்கவே நாங்கள் துப்பாக்கியுடன் காரில் துரத்திச் சென்று சுட்டோம் என வெளிப்படையாகப் பெருமை பேசினார். இவர் பேசிய வாக்குமூலப் பதிவுகளையே முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்டு, 2023-ல் போலீசார் இவரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு, அவர் அந்தப் புத்தகத்தை எழுதாமல் இருந்திருந்தால், ஒருவேளை அவர் தண்டிக்கப்படாமலேயே போயிருக்கலாம் என்று குறிப்பிட்டது.
நீதிமன்றத் தீர்ப்பும் குடும்பத்தினரின் கண்ணீரும்
பல வாரங்கள் நடைபெற்ற இந்த விசாரணையில் 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அரசுத் தரப்பு எட்டு மணி நேர ஆடியோ பதிவுகளைச் சமர்ப்பித்தது. இறுதியில், ஜூரி குழுவினர் வெறும் 3 மணி நேர ஆலோசனையிலேயே டுவேன் டேவிஸ் குற்றவாளி என ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் துபாக்கின் சகோதரி செக்கியூவா உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் வடித்தார். துபாக்கின் குடும்பத்தினர் கூறுகையில், எங்கள் குடும்பம் இத்தனை ஆண்டுகளாக நியாயமான முறையில் கூட துக்கம் அனுசரிக்க முடியாமல் தவித்தது. இப்போதுதான் நடந்தது என்னவென்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது என்று தெரிவித்தனர்.
அடுத்தது என்ன?
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டேவிஸுக்கான தண்டனை விவரம் அக்டோபர் 13 அன்று அறிவிக்கப்பட உள்ளது. நெவாடா சட்டப்படி இவருக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டேவிஸ் தரப்பு கூறியுள்ளது. காலங்கள் கடந்தாலும், இசையுலகின் மாபெரும் நாயகன் துபாக் ஷகூரின் மரணத்திற்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது உலக ரசிகர்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications
