ஷூட்டிங் போறேன்னு சொல்லிட்டு! pub-க்கு போறாங்க! சின்னத்திரை நடிகையை கத்தியால் குத்திய கணவர் கைது
பெங்களூரு: சின்னத்திரை நடிகை மஞ்சுளாவைக் கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து, அவரது கணவர் அம்பரீஷ் விளக்கம் அளித்துள்ளார். தன் மனைவிக்குக் குழந்தைகள் மீது அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அனுமந்த நகர் அருகேயுள்ள ஸ்ரீநகரில் வசிப்பவர் அம்பரீஷ். இவரது மனைவி மஞ்சுளா (எ) ஸ்ருதி, சின்னத்திரை நடிகையாக உள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மஞ்சுளா, ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுளாவுக்கும் அம்பரீஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மஞ்சுளாவின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவிய அம்பரீஷ், அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயமடைந்த மஞ்சுளா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அனுமந்தநகர் காவல்துறையினர், அம்பரீஷைக் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில் அம்பரீஷ் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
"எனக்கும் மஞ்சுளாவுக்கும் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன; எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மஞ்சுளா நடிகை என்பதால், அடிக்கடி தொலைக்காட்சிப் படப்பிடிப்புகளுக்குச் சென்றுவிடுவார். அவர் எங்கள் இரண்டு மகள்களையும் கவனித்துக்கொள்வதில்லை. மகள்கள் மீது அவருக்கு அன்போ அக்கறையோ கிடையாது. நான் மட்டுமே அவர்களைக் கவனித்து வந்தேன். குடும்பப் பொறுப்புகளையும் அவர் ஏற்பதில்லை, அதையும் நானே பார்த்துக்கொள்கிறேன்.
படப்பிடிப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, மதுபான விடுதிகளுக்கும் விருந்துகளுக்கும் செல்வதையே மஞ்சுளா வழக்கமாகக் கொண்டிருந்தார். என்னிடம் தெரிவிக்காமல் 15 நாட்கள் உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜுக்குச் சென்றுவிட்டார். நாங்கள் ரூ.25 லட்சம் குத்தகைக்கு வசிக்கும் வீட்டைக் காலி செய்யச் சொல்லி என்னிடம் தொடர்ந்து தகராறு செய்தார். என்னையும் மகள்களையும் பிரிந்து, தனது அண்ணன் வீட்டில் வசிக்கவும் அவர் முடிவு செய்திருந்தார்.
இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன் காரணமாகவே சண்டையின்போது அவரைக் குத்திக் கொலை செய்ய முயன்றேன். ஆனால், அவர் உயிர் பிழைத்துவிட்டார்" என்று அம்பரீஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்துக் கைது செய்யப்பட்ட அம்பரீஷ், தொடர் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். கணவரே மனைவியைக் கொலை செய்ய முயன்ற இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications