மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கார் விபத்தில் படுகாயம் - மனைவி, உதவியாளர் மரணம்
கர்நாடகா அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய அமைச்சரின் மனைவியும், உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு: கர்நாடகா அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய அமைச்சரின் மனைவியும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அமைச்சரின் உதவியாளரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை அமைச்சராக செயல்பட்டு வருபவர் ஸ்ரீபத் நாயக். இவர் தனது மனைவி விஜயா நாயக் மற்றும் உதவியாளர்கள் சிலருடன் நேற்று மாலை கர்நாடக மாநிலம் எல்புரா பகுதியில் இருந்து கொஹர்னா என்ற பகுதிக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

மத்திய இணை அமைச்சர் பயணம் செய்த கார் உத்தர கன்னடா மாவட்டம் அகோலா தாலுகா ஹசோஹமி என்ற கிராமம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், அவரது மனைவி விஜயா மற்றும் உதவியாளர்கள் 3 பேரும் காயமடைந்தனர். அமைச்சரின் மனைவி விஜயாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் விபத்தில் படுகாயமடைந்த மத்திய இணை அமைச்சரின் மனைவி விஜயா நாயக் மற்றும் அவரது உதவியாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீபத் நாயக் மேற்சிகிச்கைக்காக கோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கோவா முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் நாயக்கை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் சென்று பார்த்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரமோத் சாவந்த், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டார்,அவர் உடல் நலத்துடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications