இந்து பெண்களை தொட்டால் கையை வெட்டி எறியுங்கள்- மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

பெங்களூர்: இந்து பெண்களை தொட்டால் கையை வெட்டி எறியுங்கள் என மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
குடகு மாவட்டம் மாதாபுராவில் நேற்று இந்து அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த பெண்கள் குடகில் ஒளிந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அத்தகைய தேச துரோகிகளுக்கு இங்கு இடம் தரக் கூடாது. அவர்கள் இங்கு வந்தால் மண்ணோடு மண்ணாக்குங்கள்.

முதல் முறையல்ல
இந்து பெண்களின் உடலை யாரேனும் தொட்டால் அவர்களது கையை வெட்டி எறியுங்கள் என்றார். இது போல் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசுவது இது முதல் முறையல்ல.

முஸ்லிம்கள்
ஏற்கெனவே சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிப்பதன் மூலம் பட்டப்பகலில் பலாத்காரத்துக்கு கேரள அரசு வழிவகுக்கிறது என்று கூறியிருந்தார். அது போல் தாஜ்மஹாலை கட்டியது முஸ்லிம்கள் அல்ல என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாஜகவுக்கு தொடர்பில்லை
மேலும் எதிர்க்கட்சியை சேர்ந்த காக்கைகள், குரங்குகள், நரிகள் உள்ளிட்ட விலங்குகள் ஒன்று சேர்ந்து புலியான மோடியை எதிர்த்து நிற்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார் ஹெக்டே. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் மதுசூதன் கூறுகையில், அனந்தகுமார் ஹெக்டே இவ்வாறு பேசியது தவறு. அவரது பேச்சுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. இதை பா.ஜனதா நியாயப்படுத்தாது என்றார்.

பேசியது தவறு
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா எம்.பி. கூறுகையில், ‘அனந்தகுமார் ஹெக்டே கூறிய கருத்து தவறானது. அவர் தனது மனநிலையை இழந்துவிட்டார் என்பதை இது காட்டுகிறது. அவரை மந்திரிசபையில் இருந்து மோடி நீக்க வேண்டும்' என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!