என்னங்க இது! திருமண அழைப்பிதழா? 2 ஆயிரம் ரூபாய் நோட்டா? பரவும் போட்டோ.. உற்று பார்த்த நெட்டிசன்ஸ்!
பெங்களூர்: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கும் நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவத்தில் ஒரு ஜோடி தங்கள் திருமண அழைப்பிதழ் அடித்து இருந்தது தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது.
நமது நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட பணத்தாள்களான ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது. இதனால், வங்கிகளில் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து மக்கள் தங்கள் கைகளில் இருந்த பணத்தை டெபாசிட் செய்தனர். அதேபோல் பணத்தை எடுக்கவும் ஏடிஎம் வாசல்களிலும் நள்ளிரவில் கூட வரிசை கட்டி நின்ற வரலாறும் உண்டு.
கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு கூறி இந்த நடவடிக்கையை எடுத்தது. அதோடு, புதிதாக 2 ஆயிரம் ரூபாய் தாள்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. குறிப்பாக ஏடிஎம்களில் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் வினியோகிப்பதே நிறுத்தப்பட்டது.
புழக்கத்தில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் கணிசமாக குறைந்து விட்ட நிலையில், 2 ஆயிரம் ரூபாய் தாள்களை திரும்ப பெறுவதாக ரிசர் வங்கி அறிவித்துள்ளது. மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் இவற்றை செலுத்தலாம் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை செலுத்த அவகாசம் தரப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2 ஆயிரம் ரூபாய் தாள்களை ஒருநாளைக்கு 20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் எந்த ஆவணமும் படிவமும் கொடுக்க வேண்டியது இல்லை என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கூட அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் 2 ஆயிரம் ரூபாய் வடிவிலான திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 2019- ஆம் ஆண்டு புது மண ஜோடி தங்கள் திருமணத்திற்காக தங்கள் திருமணத்திற்கு அச்சு அசலாக 2 ஆயிரம் நோட்டு போலவே அழைப்பிதழை அடித்துள்ளனர். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவத்தில் இருக்கும் இந்த அழைப்பிதழில் மணமக்கள் பெயர், திருமணம் நடக்கும் இடம், தேதி உள்ளிட்ட விவரங்களும் லவ் பேங்க் ஆஃப் லைப் என்ற போன்ற வாசகங்களும் இடம் பெற்று இருக்கிறது.
காந்தி புகைப்படம் இருக்கும் இடத்தில் விநாயகர் படமும் மணமக்களை ஆசிர்வதிப்பது போலவும் படம் இடம் பெற்றிருந்தது. பார்ப்பதற்கு 2 ஆயிரம் நோட்டு போலவே இருக்கும் இந்த திருமண அழைப்பிதழ் அப்போதே இணையத்தில் பரவியிருந்தது. அழகாகவும், வித்தியாசமாகவும் வடிவமைக்கப்பட்ட இந்த பத்திரிகையை கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் பகுதியை சேர்ந்தவர்கள் உறவினர்களுக்கு கொடுத்து இருந்தனர்.
தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெறப்படும் என அறிவித்துள்ள நிலையில், இந்த திருமண பத்திரிகை சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவி வருகிறது. 2 ஆயிரம் ரூபாய் போலவே இருக்கும் இந்த திருமண அழைப்பிதழை பார்த்து நெட்டிசன்கள் ஒரு நிமிடம் உற்று பார்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications