நடிகர் சுதீப்பால் பாஜகவுக்கு லாபமா? களநிலவரம் இதுதான்! கர்நாடகா ஒன்னும் தமிழகம் இல்லையே! என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நடிகர் சுதீப் ஆதரவு தெரிவித்துள்ளார். சுதீப்பை காங்கிரஸ் கட்சி தனது பக்கம் இழுக்க முயன்ற நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தான் தற்போது கர்நாடகா அரசியலில் பேசும்பொருளாகி உள்ளது. இதன்மூலம் பாஜக பலனடையலாம் என கூறப்படும் நிலையில் கள எதார்த்தம் என்பது வேறு விதமாக உள்ளது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:
இந்தியாவில் அரசியலையும், சினிமா துறையையும் பிரிக்கவே முடியாது. மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை சினிமா பிரபலங்கள் எம்பி, எம்எல்ஏக்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களை காட்டிலும் தென்மாநில அரசியலில் சினிமாவில் ஜொலித்தவர்கள் ஆட்சியையும் பிடித்து முதல்வர் அரியணையும் ஏறிய வரலாறை நாம் பார்த்து இருக்கும்.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக நடிகர் என்டிஆர் பொறுப்பேற்றார். தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் அதிமுகவில் மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைப்படங்களில் நடித்து மக்களில் மனதை அரசியலிலும் வென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர். அதேபோல் திமுகவை பொறுத்தமட்டில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கும் தனது திரைக்கதை, வசனங்கள் மூலம் சினிமாவில் தனி இடம் பிடித்து மக்கள் மனதை வென்று முதல்வராகி இருக்கிறார்.
4 முதல்வர்கள்: இப்படி தமிழ்நாடு, ஆந்திராவில் திரையுலக தொடர்போடு அரசியலில் 4 பேர் முதல்வர் பதவியை வரை வந்திருந்தாலும் கூட இந்த அதிர்ஷ்டம் என்பது பிற நடிகர், நடிகைகளுக்கும் பொருந்துமா? என்றால் இல்லவே இல்லை என்று தான் கூற வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நடிகை குஷ்புக்கு ரசிகர்கள் கோவிலே கட்டினாலும் கூட அவர் அரசியலில் பெரியளவில் ஜொலிக்கவில்லை. தேமுதிக கட்சி தொடங்கிய விஜயகாந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை பெற்றாலும் முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்கவில்லை. இதேபோல் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாஜகவில் செயல்பட்டு வரும் நடிகர் ராதாரவி எம்எல்ஏவாகி உள்ளார். நெப்போலியன் மத்திய அமைச்சராக செயல்பட்டுள்ளார். இதுதவிர நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர்கள் தவிர மேலும் சில நடிகர், நடிகைகள் எம்எல்ஏக்களாக மட்டுமே பொறுப்பு வகித்துள்ளனர். இருப்பினும் நடிகை கவுதமி, நமீதா உள்பட நடிகை, நடிகர்கள் கட்சி பொறுப்புகளில் உள்ள நிலையில் நடிகர் செந்தில், வடிவேல் உள்பட பலர் தேர்தல் சமயத்தில் நட்சத்திர பேச்சாளர்களாகவும் வலம் வந்துள்ளனர்.
கர்நாடகா நிலவரம்: தமிழ்நாட்டில் நிலைமை இப்படி இருக்க கர்நாடகாவில் மக்களின் நிலைப்பாடு என்பது வேறுவிதமாக தான் இருக்கிறது. அதாவது கர்நாடகா மக்கள் சினிமாவில் வரும் நடிகர்களை வெறும் நடிகர்களாக மட்டுமே பார்க்கின்றனர். திரையில் ஹீரோக்களாக வலம் வருபவர்களை தங்களது கதாநாயகன் என அரசியலில் வெற்றி பெற வைப்பது என்பது தமிழ்நாட்டை காட்டிலும் கர்நாடகாவில் மிகவும் குறைவு தான் என்பது கள எதார்த்தம். இதனை நன்கு அறிந்து வைத்திருந்ததால் தான் கர்நாடகாவை பொறுத்தமட்டில் கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜ்குமார் அரசியலில் நுழையாமல் தனது இறுதிக்காலம் வரை நடிகராக வாழ்ந்து மறைந்தார். கர்நாடகாவில் அவருக்கு பட்டித்தொட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் கூட அவர் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அவரது 3 மகன்களான சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரும் தந்தையின் பாணியில் அரசியல் இருந்து ஒதுங்கியே இருக்கின்றனர். இதேபோல் மற்றொரு கன்னட சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் விஷ்ணுவர்தனும் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் அரசியல் பக்கம் எட்டிபார்க்கவில்லை.

ஜொலித்த நடிகர், நடிகைகள்: இதன்மூலம் கர்நாடகா அரசியலுக்கும், கன்னட திரையுலகிற்கும் சம்பந்தமே இல்லை என கூறிவிட முடியாது. ஏனென்றால் ராஜ்குமார், விஷ்ணுவர்தனை தவிர சில நடிகர், நடிகைகளில் அரசியல் ஆர்வம் கொண்டிருந்தனர். ஏன், விஷ்ணுவர்தனின் உயிர் நண்பராக இருந்த நடிகர் அம்பரீஷ், ஜனதாதளம்(எஸ்) காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். காங்கிரஸ் சார்பில் மத்திய இணை அமைச்சராகவும், கர்நாடக அமைச்சராகவும் இருந்தார் என்றார். அம்பரீஷ் மறைவை தொடர்ந்து அவரது மனைவியும் நடிகையுமான சுமலதா அம்பரீஷ், கணவர் அம்பரீஷின் சொந்த மாவட்டமான மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 2019ல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு கேஜிஎப் புகழ் நடிகர் யஷ், நடிகர் தர்ஷன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். முன்னதாக கடந்த 2013ல் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை ரம்யா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதேபோல் கன்னட சினிமாவில் தற்போது குணசித்திர வேடங்களில் கலக்கி வரும் அனந்த் நாக் முன்னாள் முதல்வர் ஜேஎச் படேலின் ஜனதாதள அரசில் அமைச்சராக இரந்தார். ஆனால் அதன்பிறகு அவரது அரசியல் பயணம் வெற்றி பெறவில்லை. இதேபோல் முழுநேர அரசியல்வாதியாக இருக்கும் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் திரைப்படங்களை தயாரித்து வந்தார். அதேபோல் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய பாஜக அமைச்சருமான முனிரத்னா திரைப்பட தயாரிப்பாளராக இருந்து கொண்டே அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்.
ஜொலிக்காத பிரபலங்கள்: இருப்பினும் கூட ஜனதாதளம்(எஸ்) கட்சியின் குமாரசாமியை தவிர வேறு யாரும் முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்கவில்லை. வெறும் எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்களாக மட்டுமே சிலர் வலம் வருகின்றனர். குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் கடந்த 2019 தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது ராமநகர் சட்டசபை தொகுதியில் களமிறங்கி உள்ளார். இதுதவிர நடிகைகள் உமாஸ்ரீ, மாளவிகா அவினாஷ், சுருதி, பாவனா, தாரா, நடிகர்கள் ஜக்கேஷ், நரேந்திர பாபு உள்ளிட்டோர் தற்போது அரசியல் களத்தில் இருக்கிறார்கள். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியடந்தார். இதன்மூலம் கர்நாடகாவை பொறுத்தமட்டில் நடிகர்களால் அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலை தான் உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
சுதீப்பால் பாஜகவுக்கு லாபமா: இந்நிலையில் தான் நடிகர் சுதீப் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக வரும் தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் நடிகர் சுதீப் மூலம் கர்நாடகா அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால் தான் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினம் கூட பாஜகவுக்கான சுதீப்பின் ஆதரவை ஒட்டுமொத்தமாக நாம் புறம்தள்ளிவிட முடியாது. அதாவது நடிகர் சுதீப்பின் தீவிர ரசிகர்கள், மற்றும் அவர் சார்ந்த வால்மிகி நாயகா சமுதாயத்தின் குறிப்பிட்ட அளவு ஓட்டுக்கள் பாஜகவுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் நடிகர் சுதீப் கர்நாடகா அரசியலில் பிரசாரம் செய்வது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் கூட பாஜகவின் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு உள்பட சிலருக்கு நட்பின் அடிப்படையில் பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications