கர்நாடகாவில் காதல் திருமணம் செய்த அனுபமா.. 11 மாதத்தில் இப்படியா ஆகணும்.. சிக்கிய கணவர்
பெங்களூர்: கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதாகும் அனுபமா என்ற பெண்ணுக்கும் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார். இவர்கள் காதல் திருமணம் செய்தனர். திருமணம் நடைபெற்று வெறும் 11 மாதத்தில் வரதட்சணை வடிவில் அனுபமா வாழ்க்கையில் புயல் வீசியுள்ளது. இதனால் இவர் எடுத்த முடிவு உறவினர்களை அதிர வைத்துள்ளது.
காதல் திருமணம் செய்பவர்களின் வாழ்க்கையில் பொதுவாகவே வரதட்சணை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சாதி முதல் பிரச்சனை என்றால், வரதட்சணை, அந்தஸ்து அடுத்தடுத்த பிரச்சனையாக காதலர்களின் வாழ்க்கையில் வருகிறது. நன்கு படித்த முன்னேறிய குடும்பத்து மகளை, ஒன்றுமே படிக்காத, செல்வ செழிப்பு இல்லாத, மதுபோதையில் சுற்றும் இளைஞர் காதலுக்கும் போதும் பிரச்சனை வருகிறது. இப்படி பல்வேறு வகையான பிரச்சனைகள் காதல் திருமணங்கள் வருகிறது. வரதட்சணை பிரச்சனையால் இளம் பெண் திருமணமான 11வது மாதத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதாகும் அனுபமா என்பவருக்கும், அதே கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரை அடுத்த பூதிகாலா கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், நாகராஜின் பெற்றோர் இந்த திருமணத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து நாகராஜ் அனுபமா தம்பதிக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளார்கள். தற்போது அனுபமா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில், வரதட்சணை காரணமாகவே அவரது வாழ்க்கை காணாமல் போய்விட்டது.
நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அனுபமாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்து காணப்பட்ட அனுபமா, நேற்று தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜ் மற்றும் குடும்பத்தினர் சிந்தனூர் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அனுபமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிந்தனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, நாகராஜ் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் உயிரை விட்டதாக அனுபமாவின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சிந்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுபமாவின் கணவர் நாகராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications