பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. பெல்லாரியில் ஒருவர் கைது.. யார் அந்த ஆசாமி! பரபர தகவல்
பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்துள்ள நிலையில், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் இம்மாத தொடக்கத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இது முதலில் விபத்தாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் இது குண்டுவெடிப்பு என்பது உறுதியானது.

இதையடுத்து அங்கே பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் இப்போது மிக முக்கிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஒருவர் கைது: இதற்கிடையே இந்த ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒருவரை இப்போது கைது செய்துள்ளனர். அவர் தான் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டை வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பெல்லாரியில் இவர் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறிய நிலையில், இப்போதே அங்கு வைத்தே இவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
யார் அந்த நபர்: இந்த நபர் பெல்லாரியைச் சேர்ந்த ஷபீர் என்ற கூறப்படுகிறது. அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த அதிகாரிகள் அவரை பெங்களூர் அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பெங்களூர் ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாகப் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஷபீர் பெல்லாரியில் உள்ள ஷப்பர் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தோரணகல்லு என்ற பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நபர் என்று கூறப்படுகிறது. ஷபீர் ஹைதராபாத்திற்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் இருப்பினும், அதற்குள் அவரை என்ஏஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதேநேரம் கைது செய்யப்பட்டுள்ள இந்த ஷபீர் தான் நேரடியாகக் குண்டு வைத்தாரா இல்லை என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேசிய புலனாய்வு முகமையிடம் இருந்து இதுவரை வெளியாகவில்லை.
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேவில் இம்மாத தொடக்கத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பை முதலில் பெங்களூர் போலீசார் விசாரித்த நிலையில், பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், அந்த நபர் வெறும் 9 நிமிடத்தில் அவர் கஃபேவில் குண்டுவைத்துவிட்டுக் கிளம்பியது தெரிய வந்தது.
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் போக்கு காட்டிய மஃப்ளர் ஆசாமி கைது.. தட்டி தூக்கிய என்ஐஏ
இதையடுத்து அவர் அந்த கஃபேவுக்கு வந்தார். அங்கே குண்டை வைத்துவிட்டு எப்படிக் கிளம்பினார் என்பது குறித்த சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் சந்தேகிக்கப்படும் நபர் பல முறை தனது உடைகளையும் தோற்றத்தையும் மாற்றியது உறுதியானது. குண்டுவெடிப்பு ஏற்பட்ட ஹோட்டலில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் அவர் முழு கை சட்டை மற்றும் வெளிர் நிற போலோ தொப்பி, கண்ணாடிகள் மற்றும் மாஸ்க் அணிந்து இருந்தார்.
மதியம் 2.30 மணியளவில் அவர் மற்றொரு பேருந்தில் ஏறிய நிலையில், அப்போது அவர் ஊதா நிற ஹாவ் ஹேண்ட் சட்டை மற்றும் கருப்பு தொப்பியுடன் மாஸ்க் கூட அணிந்து இருந்தார். அதேநேரம் அன்று இரவே எடுக்கப்பட்ட 3ஆவது சிடிடிவி காட்சியில் அவர் தொப்பியோ கண்ணாடியோ அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
