ஒரே கேம் பிளான்! கர்நாடகாவில் பாஜக, காங். போடும் அந்த வியூகம்! இடையில் ஜேடிஎஸ் வேற! ஒர்க்அவுட் ஆகுமா
கர்நாடக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்குள்ள கட்சிகள் மக்கள் மனங்களைக் கவர முயன்று வருகிறது.பிரசாரம் செய்து வருகிறார்கள்.
பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில காலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே அங்கு பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளும் ஒரு சேர ஜேடிஎஸ் கட்சியை எதிர்க்கத் தொடங்கியுள்ளது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது,
கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்கவே பாஜக விரும்புகிறது. ஏனென்றால், தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாகக் கர்நாடகா இருப்பதால் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவே முயல்கிறது.

கர்நாடகா
இதன் காரணமாகவே பிரதமர் மோடி பல முறை கர்நாடகாவுக்கு நேரடியாக வருகிறார். பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதேநேரம் அங்கு பசவராஜ் பொம்மை மாநில அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இந்த அதிருப்தியைப் பயன்படுத்தி ஆட்சியை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முயல்கிறது. அங்கு சித்தராமையா, டிகே சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

ஜேடிஎஸ்
இதன் காரணமாக கர்நாடகாவில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தாலும் கூட, மூன்றாவது கட்சியான ஜேடிஎஸ் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெற முடியாது என்பதை இரு கட்சிகளுமே உணர்ந்து கொண்டதாகவே தெரிகிறது. கர்நாடகாவில் பல இடங்களில் மதச்சார்பற்ற கட்சி ஜனதா தளம் கட்சிக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் உள்ளது.

பாஜக
2004, 2008 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளைப் போல வரும் தேர்தலிலும் தொங்கு சட்டசபை அமையாமல் இருக்க பாஜகவும் காங்கிரஸ் என்று இரு கட்சிகளுமே ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கின்றன. பெலகாவியில் கடந்த வாரம் நடந்த பெலகாவியில் நடந்த பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக பெரும்பான்மையைப் பெற பெலகாவி மக்கள் தங்களுக்கு அதிகப்படியான இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். மறுபுறம் வெறும் 25-30 இடங்களில் வென்று காங்கிரஸ் முதுகில் ஏறி ஆட்சி செய்ய ஜேடிஎஸ் விரும்புவதாகவும் அவர் சாடினார்.

ஏன் முக்கியம்
மேலும், ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரு வேறு கட்சிகளைப் போலத் தோன்றினாலும், இறுதியில் ஜேடிஎஸ் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே உதவும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2004, 2008 மற்றும் 2018 தேர்தல்களில் அங்கு பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 113 என்ற மேஜிக் எண்ணை அடைய முடியவில்லை. இதனால், 2006இல் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் ஜேடிஎஸ் உடன் இணைந்து ஆட்சியை அமைத்து. அதேநேரம் 2008 மற்றும் 2018 மாற்றுக் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய அவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள்.

காங்கிரஸ்
மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய சித்தராமையாவும் ஜேடிஎஸ் கட்சிக்குப் பதிலாக மக்கள் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்குக் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஜேடிஎஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், ஜேடிஎஸ் கட்சியால் அதிகபட்சம் 20-22 இடங்களை மட்டுமே வெல்ல முடியும் என்றும் அது காங்கிரஸ் ஆட்சியை அமைப்பதே தடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரே கேம் பிளான்
ஜேடிஎஸ் கட்சிக்கு வொக்கலிகா சமூகத்தினர் ஆதரவே அதிகப்படியாக உள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரும் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். அவரும் ஜேடிஎஸ் கட்சியுடன் தாங்கள் 2018இல் ஆட்சியை அமைத்ததாகவும் இருப்பினும் அவரால் ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டு, மக்கள் ஜேடிஎஸுக்கு பதிலாகக் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்றார். சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்கு பிரியக் கூடாது என்தையே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னிறுத்துகின்றன.

ஜேடிஎஸ்
ஜேடிஎஸ் கட்சித் தலைவர் குமாரசாமி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்போம் என்று சொன்னாலும், அவரது கேம் பிளான் ரொம்பவே சிம்பிள். அதாவது பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளையும் தனிப்பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு இடங்களை வெல்ல வேண்டும். அதன் பிறகு இரு கட்சிகளில் தாவது ஒன்றை தன்னுடன் கூட்டணி வைக்கக் கட்டாயப்படுத்த வேண்டும். இதுதான் அவர்களின் கேம் பிளான். இதை முன்வைத்தே அவர்கள் களமிறங்குகிறார்கள். இந்தச் சூழலில் அங்கு அரசியல் களம் இருக்கும் நிலையில், கர்நாடக மக்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது சில காலத்தில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications