கோபக்காரர்களின் சிட்டியாகும் பெங்களூர்? சென்னையிடம் கற்க வேண்டியது என்ன?
பெங்களூர்: பெங்களூரில் சமீபகாலமாக சாலைகளில் பொதுமக்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கோபக்காரர்கள் குவிந்திருக்கும் நகராக பெங்களூர் மாறி வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூரில் மக்கள் ஏன் கோபப்பட்டு சண்டையிட்டு கொள்கின்றனர்? என்பதற்கான காரணத்தையும், சென்னை எப்படி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கிறது? என்பது பற்றி எக்ஸ்பர்ட்ஸ் விளக்கி உள்ளனர்.
பெங்களூர்.. இந்தியாவின் ‛சிலிக்கான் சிட்டி' எனவும், ‛பூங்கா நகர்' எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் ‛சிலிக்கான் சிட்டி' எனவும், சிட்டிக்குள்ளேயே அதிகளவு மரங்களுடன் பூங்காக்கள் இருப்பதால் ‛பூங்கா நகரம்' என்ற பெயர்களை பெற்ற பெங்களூருக்கு தற்போது இன்னொரு பெயர் இணைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால் ‛கோபக்காரர்களின் சிட்டி'.. இதற்கு காரணம் கடந்த ஓராண்டுகளாக பெங்களூரில் நடந்து வரும் சம்பவங்கள் தான். சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் நடுரோட்டில் சண்டையிடுவது, வாகனங்களை விரட்டி விரட்டி மிரட்டுதல், சிறிய விஷயத்துக்கே கோபத்தின் உச்சிக்குப்போய் கெட்ட வார்த்தைகளால் வசைப்பாடுதல் உள்ளிட்டவை தான் காரணம்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தொடர்ந்து பெங்களூரை டேமேஜ் செய்து வருகின்றன. அந்த வகையில் தான் நேற்று முன்தினம் அதிர்ச்சி வீடியோ வெளியானது. அதாவது பெங்களூர் மாகடி ரோட்டில் பெண்கள் இருவர் ஒரே நேரத்தில் 2 ஓலா ஆட்டோவை ‛புக்' செய்தனர். இதில் முதலில் வந்த ஆட்டோவில் அவர்கள் ஏறிய நிலையில் இன்னொரு ஆட்டோவை கேன்சல் செய்தனர். இதனால் கடுப்பான அந்த ஆட்டோ டிரைவர் அவர்களை விரட்டி கன்னத்தில் அறைந்தார். இதுதொடர்பாக வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண்கள் எக்ஸ் பக்கத்தின் மூலம் பெங்களூர் மாநகர போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி அந்த ஆட்டோ டிரைவர் முத்துராஜை கைது செய்தனர்.
அதற்கு முன்பாக கடந்த 4ம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் ஆண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். ஒரு வாரத்துக்கு முன்பு பெங்களூர் பெல்லந்தூரில் சாலையில் ஏற்பட்ட தகராறில் பவுன்சர் இன்னொருவரின் காரை சேதப்படுத்தினார். அதேவாரத்தில் வித்யாரண்யபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வாகனம் ஏற்றி ஒருவர் கொலை செய்தார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் வீலிங் செய்தவரின் பைக்கை பெங்களூர் நெலமங்களா அருகே மேம்பாலத்தில் இருந்து பொதுமக்கள் கீழ தூக்கி வீசி ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர்.

கடந்த 2023 டிசம்பர் மாதம் பெங்களூரில் பெயர் பலகைகள் கன்னட மொழிகளில் இடம்பெற வேண்டும் என்ற விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு தேசிய அளவில் ஹெட்லைன் ஆகியது. இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் பெங்களூரில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். வேலைக்காக இங்கு வந்து தங்கியிருக்கும் சூழலில் இத்தகைய சம்பவங்கள் அவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பது தான் காரணம்.
அதுமட்டுமின்றி பெங்களூர் என்பது ‛கோபக்காரர்களின் சிட்டி' என்ற பெயரை நோக்கி செல்கிறதா ? என்ற கேள்வி எழுப்பி உள்ளது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளனர். சோசியாலஜி பேராசிரியர் சுதா சீதாராமன், ‛‛இந்த கோபத்துக்கு முக்கிய காரணம் என்பது இங்கு வசிக்கும் மக்களிடையே உள்ள பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் தான்.
இந்த இடைவெளி என்பது கோபத்தை வெளிக்காட்ட வைக்கிறது. பெங்களூருக்கு ஒவ்வொருவரும் பல கனவுகளுடன் வருகின்றனர். அப்படி வருவோருக்கு சரியான வாய்ப்பு அமையாமல் உணவுக்கு கஷ்டப்படும் சூழலில் இன்னொரு தரப்பு பெரிய கார்களில் சென்று உணவை வீணடிக்கின்றனர். இதனால் இருதரப்புக்கும் பிரச்சனை என்பது உருவாகிறது'' என்றார்.
அதேபோல், ஆங்கில பேராசிரியர் டேனியல் டேவிட் கூறுயைில், ‛‛ஐடி நிறுவனங்களின் பணி என்பது அதிக அழுத்தம் கொண்ட வேலையாகும். இந்த பணியின்போது 6 முதல் 10 மணிநேரம் கோபத்தை அடக்கி வைக்கின்றனர். அதன்பிறகு அவர்கள் கோபத்தை காட்டும் இடம் பொதுவெளியாக இருக்கிறது. இந்த கோபம் தான் சிறிய பிரச்சனைகளையும் பூதாகரமாக்கி விடுகிறது.
மேலும் பெங்களூரில் கன்னடர்கள், கொடவா, மங்களூர், குஜராத்திகள், மராத்திகள், தமிழ், ஹிந்தி உள்பட வெவ்வேறு மொழி பேசும் மக்கள் உள்ளனர். இந்த மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் பொது மொழி இன்றி எதுவும் செய்ய முடியாது. உதாரணமாக சென்னையில் குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் மொழியை கற்று கொள்கின்றனர். ஆனால் பெங்களூரில் அப்படியான நிலை என்பது குறைவாக உள்ளது. இதுவும் பிரச்சனைக்கு காரணமாகும்'' என்றார்.
பெங்களூர் நகர மாவட்ட எஸ்பி சிகே பாபா கூறுகையில், ‛‛பெங்களூரில் இருப்பவர் தங்களுக்கான இடம் இதுவாக இல்லையோ என நினைக்கும்போது அவர்கள் கோபப்படுகின்றனர். அதேவேளையில் மற்றவர்களுக்காக நாம் வளைந்து கொடுத்து செல்ல வேண்டுமோ எனும் போது பிரச்சனை வருகிறது. இதனால் அவர்கள் அமைதியை மறந்து கோப்படுகின்றனர். இத்தகை நபர்களால் மோதல் தொடங்குகிறது.
அதேபோல் பெங்களூர் புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் என்பது தற்போதைய மக்கள்தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து உருவாக்கப்படவில்லை. முதலில் நெலமங்களாவின் டிராபிக்கை பற்றி பேசிய நாம் இப்போது ஹெப்பகோடி போக்குவரத்து நெரிசலை பற்றி பேசுகிறோம். நாளை இன்னொரு ஏரியாவில் நிலவும் டிராபிக் பற்றி பேசுவோம். இதனால் சாலைகளிலும் சண்டையிட்டு கொள்வது நடக்கிறது. இதற்காக போக்குவரத்தை மாற்றம் செய்தாலும் கூட எந்த தீர்வையும் கொண்டு வர முடியாது'' என்றார்.

இதையடுத்து டாடா இன்ஸ்ட்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் பேராசிரியர் அவதி ராமையா கூறுகையில், ‛‛காஸ்மோபொலிட்டன் சிட்டியில் இதுபோன்ற பிரச்சனை நடப்பது ஒன்றும் புதிது அல்ல. இந்த பிரச்சனைகளை முதலில் செய்தியாக்குவது யார்? என்ற போட்டி மீடியாக்களிடம் உள்ளது'' என்று குற்றம்சாட்டினார். அதேபோல் மூத்த போலீஸ் அதிகாரி, ‛‛சோசியல் மீடியாக்களின் காரணமாக தான் சாலைகளில் சண்டையிட்டு கொள்ளும் சம்பவங்கள் அதிகரிக்கிறது'' என்றார்.
சைக்கலாஜிஸ்ட் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‛‛பெங்களூரில் விரக்தி மற்றும் பகை உணர்வு உள்ளது. இதனால் தான் சமீபகாலமாக மோதல் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவை பொறுத்தவரை கோபம் என்பதை மிகைப்படுத்தி கூறி வருகின்றனர். கோபம் என்பது மிகப்பெரிய ஆயுதம் என்ற தவறான வரையறை உள்ளது. இது மாற வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications