வீட்டில் குழந்தைகள் இருக்கா? உயிரை பறிக்கும் சிப்ஸ்.. "இந்த" ஒரு தப்பை மட்டும் செய்யாதீங்க
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் சிப்ஸ் பாக்கெட்டுக்குள் இலவசமாக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பந்தை விழுங்கியதால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான உணவு பொருட்களில் வழங்கப்படும் சிறிய விளையாட்டு பொருட்களால் எந்தளவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதையே இது உணர்த்துவதாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொடுக்கும் போது பெற்றோர் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும். சிறிய பொருட்களை விளையாட கொடுத்தால் கூட அதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்படியொரு மோசமான சம்பவம் தான் கர்நாடகா மாநிலம் மைசூரில் நடந்துள்ளது.

என்ன நடந்தது!
மைசூர் மாவட்டம் கவுரிபுரா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், பிரபல நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளான். அந்த பாக்கெட்டில் இலவசமாக பிளாஸ்டிக் பந்து ஒன்று இருந்துள்ளது. அந்த பந்தை எடுத்து அச்சிறுவன் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பந்தை சிறுவன் விழுங்கியுள்ளார்.
பிளாஸ்டிக் பந்து அவரது தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் தனது பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். மேலும், அந்த குடும்பம் கிராமத்தில் முக்கியமான குடும்பம் என்பதால் ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் உள்ளது.
போலீஸ் சொல்வது என்ன
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "அந்த சிப்ஸ் பாக்கெட்டுடன் இலவசமாக வழங்கப்பட்டிருந்த சிறிய பிளாஸ்டிக் பந்தை சிறுவன் விளையாடும்போது தவறுதலாக விழுங்கியுள்ளான். அதுவே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுவரை சிறுவனின் குடும்பத்தினர் போலீசில் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. இதனால் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்கோ அல்லது குற்றவியல் வழக்கோ இதுவரை பதிவு செய்யப்படவில்லை" என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும், குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக கூறியுள்ள போலீசார், அவர்கள் புகார் அளித்தால் அதன்படி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வல்லுநர்கள் எச்சரிக்கை
இதற்கிடையில் சிறிய குழந்தைகளுக்காக விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுடன் வழங்கப்படும் இதுபோன்ற சின்ன சைஸ் விளையாட்டு பொருட்கள் பாதுகாப்பு குறித்தும் கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் இதுபோன்ற பொருட்களை வாயில் வைக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகள் நல நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சோக சம்பவம், குழந்தைகளுக்கு சிறிய விளையாட்டு பொருட்களை கொடுக்கும்போது பெற்றோர் எந்தளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
