ஆந்திரா சர்ச்சை.. கைடன்ஸ் தமிழ்நாடு டீமை இழிவுபடுத்தாதீங்க.. டிஆர்பி ராஜா காட்டமான பதிவு
சென்னை: கைடன்ஸ் தமிழ்நாடு துறையை கண்டபடி இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்! தமிழ்நாட்டின் திறமைகளை சீர்குலைப்பதை நிறுத்துங்கள்! தமிழ்நாட்டிலிருந்து முதலீடுகளை யாராலும் எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது. ஆனால் திறமையற்ற, தன்னம்பிக்கையற்ற மற்றும் உணர்வற்ற முடிவுகள் நிச்சயமாக முதலீடுகளை வெளியேறச் செய்யும்! நிறுவனங்களுக்குத் தேவை நல்ல தலைமை; அரசியல் நாடகங்கள் கிடையாது என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார்.
கைடன்ஸ் தமிழ்நாடு சர்ச்சை குறித்து டாக்டர் ஷர்மிளா வெளியிட்டிருந்த பதிவில், " ஏதோ ஒன்று சரியாகப்படவில்லை. முதலில், ஆந்திராவுக்கு முதலீடுகள் மாறுவதாக திமுக கூறிய குற்றச்சாட்டுகளை தவெக அரசு மறுத்தது.

இப்போது, "சந்தேகத்திற்குரிய தரவு கசிவு" தொடர்பாக Guidance TN-ல் 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ஆந்திராவில் பணியில் சேர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இது திமுகவின் சதியாகச் சித்தரிக்கப்படுகிறது?! கசிந்ததாகக் கூறப்படும் தரவு என்ன? ஆந்திராவில் 3 பேர் பணியில் சேர்ந்ததைத் தவிர வேறு என்ன ஆதாரங்கள் உள்ளன?
ஷர்மிளா கேள்வி
இந்த 15 பேர் யார்? முந்தைய ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்களா அல்லது சமீபத்தில் பணியில் சேர்ந்தவர்களா? முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா? தவெக ஆட்சியின் கீழ் எந்த முதலீடுகளும் வெளியேறவில்லை என்று முன்பு கூறப்பட்டதற்கு இது எவ்வாறு பொருந்துகிறது?
இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் வரை, "திமுக உளவு நபர்" என்ற கதையும், அதற்கு எதிரான அரசியல் வாதமும் முழுமையற்றவையாகவே இருக்கும்.
இந்த அரசியல் கூச்சல்களும், வெளிப்படைத்தன்மையற்ற பணிநீக்கங்களும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தீவிரமாக முன்வரும் முதலீட்டாளர்கள் கூட ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும்" இவ்வாறு தனது சந்தேகங்களை ஷர்மிளா எழுப்பி இருந்தார் .
டிஆர்பி ராஜா பதில்
இதற்கு பதில் அளித்து திமுக முன்னாள் அமைச்சர் (தொழில்துறை) டிஆர்பி ராஜா வெளியிட்டுள் பதிவில் கூறுகையில்," தமிழ்நாட்டின் மிகச் சிறந்த அறிவாளிகள் பலரால் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தை, தற்போதைய அரசின் முதிர்ச்சியற்ற, சோசியல் மீடியாவை மையமாகக் கொண்ட அரசியலால் இழிவுபடுத்தப்படுவதைப் பார்ப்பது மிகுந்த வேதனையாக உள்ளது.
கைடன்ஸ் தமிழ்நாடு ஊழியர்கள்
கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் ஒரு சில ஊழியர்கள் வெளியேறிவிட்டதால் முதலீடுகள் காணாமல் போய்விடும் என்ற தவெக அரசின் வாதம் அதைவிட பரிதாபகரமானது! தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பும், தொழில் சூழலும் உண்மையிலேயே இவ்வளவு பலவீனமானதா என்று இந்த தவெக அரசு சொல்கிறதா?
அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்
இதில் இன்னொரு முரண்பாடாக எனக்கு தோன்றுவது என்னவென்றால், தற்போது வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016-21) நியமிக்கப்பட்டவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது திமுக அரசு அவர்களை வெளியேற்றியதா என்று கேட்டால்.. இல்லை! நாங்கள் அவர்களின் அனுபவத்திற்கு உரிய மதிப்பளித்தோம், தனிநபர்களை நாங்கள் மதித்தோம், கைடன்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்தோம்.
கண்ணியமாக நடந்து கொண்டோம்
தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்புப் பணியில் மிக முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியபோதுகூட, நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். அப்படியான ஒரு கண்ணியமான தலைமையாக தன்னை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த தவெக அரசு தனது சொந்த நிறுவனத்தையே பலவீனப்படுத்தி, வழக்கம்போல தனது தோல்விகளுக்கு திமுகவை குற்றம் சாட்டுகிறது!
இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்
கைடன்ஸ் தமிழ்நாடு துறையை கண்டபடி இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்! தமிழ்நாட்டின் திறமைகளை சீர்குலைப்பதை நிறுத்துங்கள்! தமிழ்நாட்டிலிருந்து முதலீடுகளை யாராலும் எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது. ஆனால் திறமையற்ற, தன்னம்பிக்கையற்ற மற்றும் உணர்வற்ற முடிவுகள் நிச்சயமாக முதலீடுகளை வெளியேறச் செய்யும்! நிறுவனங்களுக்குத் தேவை நல்ல தலைமை; அரசியல் நாடகங்கள் கிடையாது!" இவ்வாறு காட்டமாக கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
