குட் நியூஸ்..! ஈரான் போருக்கு பின் ஹார்முஸ்-ல் முதல் LNG கப்பல் பயணம்.. நேராக இந்தியாவுக்கு வருகிறதா?
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடங்கிய இரு மாதங்களுக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணை வழியாக முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) சரக்கு கப்பல் வெற்றிகரமாக பயணித்துள்ளது. இந்த நிகழ்வு உலக எரிசக்தி சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகமே வளைகுடா நாடுகளின் எல்என்ஜி சப்ளைக்காக காத்திருக்கும் வேளையில், 2 மாத போருக்கு பின்பு முதல் முறையாக ஹார்முஸ் வழியாக ஒரு எல்என்ஜி கப்பல் வருவது பெரும் வாய்ப்பை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

முபாரக் கப்பலின் பயணம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) தாஸ் தீவு துறைமுகத்தில் இருந்து மார்ச் மாத தொடக்கத்தில் சரக்கேற்றப்பட்ட முபாரக் என்ற எல்என்ஜி கப்பல், ஹார்முஸ் நீரிணை வழியாக வெளியேறியுள்ளது.
கப்பல் வளைகுடா பகுதியில் சிறிது நேரம் நின்றிருந்த நிலையில், மார்ச் 31-ம் தேதி சிக்னல் அனுப்புவதை நிறுத்தியது. பின்னர் ஏப்ரல் 27-ம் தேதி இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் மீண்டும் தோன்றியது. தற்போது இந்தியாவின் தெற்கு முனையைக் கடந்து சீனாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மே 15-ம் தேதிக்குள் சீனாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வரை வந்த எல்என்ஜி கப்பல் சீனாவுக்கு திரும்பியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடக்கம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இரு தரப்பும் ஹார்முஸ்-ல் தடை விதித்ததால், கடந்த இரு மாதங்களாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு குறைந்திருந்தது. உலகின் மொத்த எல்என்ஜி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. எனவே இந்தப் பாதை முடக்கம் உலகளாவிய எரிவாயு சந்தையை மோசமாக்கி, விலைகளை உயர்த்தியது.
கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும்போது தங்கள் டிரான்ஸ்பாண்டர்களை (அடையாள சிக்னல்) அணைத்துவிடுவது வழக்கம். இது கண்காணிப்பில் இருந்து தப்பிக்க உதவுகிறது. எனவே சில சமயங்களில் கப்பல் தரவுகள் தாமதமாகவோ அல்லது தவறாகவோ பதிவாகலாம். இந்த முறையை பயன்படுத்தி தான் இக்கப்பல் ஹார்முஸ்-ஐ விட்டு வெளியேறியிருக்கலாம் என தெரிகிறது.
கத்தார் நாட்டில் இருந்து எல்என்ஜி ஏற்றிய பல கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை நெருங்கியபோது, தொடர்ந்து நிலவும் பதற்றம் காரணமாக திரும்பிச் சென்றன. இந்தச் சூழலில் முபாரக் கப்பல் வெற்றிகரமாக பயணித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஹார்முஸ் நீரிணை மீண்டும் சீராக இயங்கத் தொடங்கினால், உலக எல்என்ஜி மற்றும் கச்சா எண்ணெய் விலை அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த ஒரு கப்பல் மட்டும் போதாது. தொடர்ச்சியான போக்குவரத்து மீண்டும் தொடங்க வேண்டும் இந்தியா முதல் தைவான் வரையில் எல்என்ஜி தட்டுப்பாடு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications