"வரலாற்றை பாருங்க.. தங்கம் விலை 'நிச்சயம்' குறையும், ஆனால்..:" பெரிய வெடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அது மிடில் கிளாஸ் மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை வரும் காலங்களிலும் உயருமா.. இல்லை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியே பலருக்கும் இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை குறித்த விளக்கிய ஆனந்த் சீனிவாசன், இது வரும் காலங்களில் என்னவாக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கொரோனாவுக்கு முன்பு வரை சில ஆண்டுகள் தங்கம் விலையில் மிகப் பெரியளவு ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால், கொரோனா சமயத்தில் உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

தங்கம் விலை
அதிலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் எப்போது பதவியேற்றாரோ அப்போது முதல் தங்கம் விலை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது. ரெசிப்ரோக்கல் வரி, வணிகக் கட்டுப்பாடுகள் என அவர் தடாலடியாக அறிவிக்கும் வரிகளே இதற்குக் காரணமாகும். இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சுமார் ரூ.600க்கு மேல் உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் (ஏப்ரல் 17) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.105 அதிகரித்து ரூ.8920க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் ஒரு சவரன் தங்கம் ரூ.840 உயர்ந்து ரூ.71,360க்கு விற்பனையாகிறது.
ஏங்கும் மிடில் கிளாஸ்
தங்கம் விலை இப்படித் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் மிடில் கிளாஸ் மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தங்கம் விலை இனி இதுபோல தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்குமா.. இல்லை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாகவும் அது வரும் காலத்தில் எப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாகவும் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "தங்கம் விலை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை 3% ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 3ம் தேதி முதல் தங்கம் விலை சுமார் ரூ.255 உயர்ந்துள்ளது. நடுவில் சுமார் ரூ.250 குறைந்துள்ளது. இப்போது தங்கம் விலை ரூ.8800ஐ தாண்டிவிட்டது. 24 கேரட் தங்கம் ரூ.9700ஐ நெருங்கிவிட்டது. அத்தோடு 3 சதவிகித ஜிஎஸ்டியை சேர்த்தாலே ரூ.10 ஆயிரத்திற்குப் போய்விட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் கொடுத்த லாபத்தை அமெரிக்கப் பங்குச்சந்தையான எஸ் அண்ட் பி, இந்தியப் பங்குச்சந்தைகளான நிஃப்டி, சென்செக்ஸ் என எதுவுமே கொடுக்கவில்லை. அதேநேரம் கடந்த 25 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 10 ஆண்டுகளில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். அதாவது தங்கம் என்பது எப்போதும் மேலே உயர்ந்து கொண்டே இருக்காது.
தங்கம் விலை குறையலாம்
கடந்த 25 ஆண்டுகளில் தங்கம் விலை ஒரு முறை கிட்டதட்ட 2600 டாலரில் இருந்து 1870 டாலரில் முடிந்தது. தங்கம் என்பது வெறும் கரன்சி மட்டும் இல்லை. அதில் புவிசார் அரசியலும் அடங்கி இருக்கிறது. தங்கத்திற்கும் புவிசார் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கணிப்பதே ஒரு திறமை தான். இப்போது தங்கம் விலை மேலே உயர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால், இதே தங்கம் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரு 10 வருடம் கூட இருக்கும். அது எப்போது வரும் என்பதைக் கணிப்பதை ஒரு திறமை.
ஆனால் இப்போது நடக்காது
தங்கம் டாலரில் குறைந்தாலும் கூட ரூபாயில் குறையாது. அதுவும் கூட இப்போது நடக்க வாய்ப்பு எனக்குத் தெரிந்து வாய்ப்பில்லை. எனவே, இப்போது தங்கம் விலை பக்காவாக ஏறி வருகிறது. அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3304 டாலராக இருக்கிறது. இது மிகச் சிறப்பாக இருக்கிறது. 3600 டாலர் வரை தங்கம் விலை போகும் என்கிறார்கள். அது நிச்சயம் தொடும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications