திரும்பிய பக்கமெல்லாம் தங்கம் தான்.. புதிய பிளானை கையில் எடுக்கும் உலக நாடுகள்.. அப்போ இந்தியா?
பெர்லின்: தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது அனைவருக்கும் தெரியும். இதனால் தங்கம் வைத்திருந்த அனைவருக்கும் மிகப் பெரிய லாபமும் கிடைத்திருந்தது. தனி நபர்கள் மட்டுமின்றி உலக நாடுகளுமே கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகிறதாம். இது குறித்த முக்கியமான டேட்டா வெளியாகியுள்ளது. நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக உலகின் அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் கையிருப்பாக அந்நியச் செலாவணி கையிருப்பைச் சேர்த்து வைப்பார்கள். எதாவது எதிர்பாராத பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்போது இவை கை கொடுக்கும் என்பதால் இதுபோல அனைத்து மத்திய வங்கிகளும் வைப்பார்கள். எப்போதும் அமெரிக்க டாலரையே உலக நாடுகள் கையிருப்பாக வைத்திருப்பார்கள்.

யூரோவை மிஞ்சிய தங்கம்
டாலருக்கு பிறகு ஐரோப்பிய கரன்சியான யூரோ கையிருப்பாக இருக்கும். ஆனால், அந்த நிலை தான் இப்போது மாறுகிறது. அதாவது உலகின் இரண்டாவது பெரிய அந்நியச் செலாவணி கையிருப்பாக யூரோவை தங்கம் விஞ்சிவிட்டதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இதுபோல நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகள் மிகப் பெரியளவில் தங்கத்தில் முதலீடு செய்து வந்தன.
சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் தங்கள் இருப்புகளை நிர்வகிக்கும் முறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதை இது குறிக்கிறது. தங்கம் எப்போதுமே ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும் என்பதாலேயே தங்கத்தின் மீதான முதலீடுகளை அனைத்துத் தரப்பினரும் அதிகரித்துள்ளனர்.
டாலருக்கு பின் தங்கம்
இப்போதும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அமெரிக்க டாலரையே அதிகம் கையிருப்பாக வைத்துள்ளன. சர்வதேச வங்கிகளின் கையிருப்பில் சுமார் 46% அமெரிக்க டாலராகவே உள்ளது. ஆனால் தங்கம் இப்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கரன்சியான யூரோ மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் சர்வதேச நாணயங்களைக் காட்டிலும் தங்கத்தின் பக்கம் திரும்பி உள்ளதையே இது காட்டுகிறது.
அதிகரிக்கும் தங்கக் கையிருப்பு
கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய வங்கிகள் தீவிரமாகத் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. குறிப்பாகக் கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் மத்திய வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் 1,000 டன்களுக்கு மேல் தங்கம் வாங்கியுள்ளன. இது அதற்கு முன்பு வாங்கப்பட்ட ஆண்டுக்குச் சுமார் 400-500 டன்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
சர்வதேச தங்கக் கையிருப்பு தற்போது 36,000 டன்களைத் தொட்டுள்ளது. இதற்கு முன்பு வரலாற்றில் 1965இல் தான் உச்சமாக 38,000 டன்கள் தங்கம் கையிருப்பாக இருந்தது. அதன் பிறகு உலக நாடுகள் தங்கக் கையிருப்பைப் பல்வேறு காரணங்களால் குறைத்த நிலையில், மீண்டும் அந்த எண்ணிக்கையை நெருங்கி வருகிறது.
இந்தியாவின் பிளான்
அதிகபட்சமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியிடம் 8,133.46 டன் தங்கம் இருக்கிறது. இருப்பினும், அவர்கள் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிதாகத் தங்கத்தைக் கொள்முதல் செய்யவில்லை. அதேநேரம் இந்தியாவின் ரிசர்வ் வங்கி அமைதியாக அதன் கையிருப்புகளை அதிகரித்து வருகிறது. உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, டிசம்பர் 2024ல் இந்திய ரிசர்வ் வங்கியிடம் 876.18 டன் தங்கம் இருந்தது. அதன் பிறகு அடுத்த 3 மாதங்களில் மட்டும் ரிசர்வ் வங்கி 3.42 டன் கூடுதல் தங்கத்தை வாங்கியுள்ளது.
அடுத்து என்ன!
தற்போதைய சூழலில் எந்த நாடும் தங்கத்தை வாங்குவதைக் குறைப்பது போலத் தெரியவில்லை. உலக தங்க கவுன்சில் நடத்திய சர்வேயில், உலகெங்கும் உள்ள சுமார் 95 சதவீத மத்திய வங்கிகள் அடுத்த 12 மாதங்களில் தங்கள் தங்க இருப்புகள் அதிகரிக்கவே திட்டமிட்டுள்ளன. குறிப்பாக 43% நாடுகள் அதிகளவில் தங்கத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளனர். தங்கம் ஒரு முதலீடாக இருப்பது புதிது இல்லை. எப்போதும் இருக்கும்தான். ஆனால், இந்தளவுக்கு அதிக முதலீடு தங்கம் பக்கம் திரும்புவது எப்போதாவது தான் நடக்கும். இதற்குப் புவிசார் அரசியல், பொருளாதார மந்தநிலை அபாயம் காரணமாக உள்ளன.
நாம் என்ன செய்ய வேண்டும்!
பொதுவாகவே வல்லுநர்கள் அனைவரும் போர்ட்ஃபோலியோவில் சுமார் 10 சதவீதம் தங்கத்தை வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், ஆபத்தான காலங்களைச் சமாளிக்க அனைத்துக் குடும்பங்களிடமும் குறைந்தது 200-400 கிராம் தங்கமாவது இருக்க வேண்டும் என்கிறார். குறுகிய காலத்தில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம்.. ஆனால் நீண்ட கால நோக்கில் தங்கம் உயரவே செய்யும் என்பதால் அது பாதுகாப்பை வழங்குகிறது.












Click it and Unblock the Notifications