டிமார்ட் ஜெயிப்பது எப்படி.. தமிழ்நாட்டில் குறுகிய காலத்தில் இவ்வளவு வளர்ந்ததன் பார்முலா என்ன?
சென்னை: டிமார்ட் நிறுவனம் ஒரு கடையை திறந்தால் அதனை சுற்றியுள்ள 10 கிமீ மக்கள் அங்கு வந்து பொருட்கள் வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமின்றி, திண்டுக்கல் மாதிரியான சராசரியாக வளர்ந்த நகரங்களிலும் டிமார்ட் கடையை திறந்துள்ளது. ஒரு டிமார்ட் கடை பல மளிகை கடைகளின் வியாபாரத்தை பிடித்து விடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஏனெனில் டிமார்ட் தரும் விலையில் மளிகை கடைகளால் தர முடியாது. அவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை பார்க்கிறார்கள்.
டிமார்ட்டின் வெற்றியின் முக்கிய ரகசியம் என்னவென்றால் "ஒவ்வொரு நாளும் குறைந்த விலை" என்ற எளிய மற்றும் நிலையான வியாபாரத் தந்திரம் தான். நம்மூர்களில் பெரும்பாலான சில்லறைக் கடைகளைப் போல் இல்லாமல், டிமார்ட் அதன் கடைகளுக்குச் சொந்தமாக இடங்களை வாங்கிவிடுகிறது. ஒருவேளை வாங்க முடியாது என்றால், நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதனால் அவர்களுக்கு வாடகை செலவு மிகக் குறைவு, இது மற்றவர்களுக்கு ஒரு பெரிய போட்டியாக அமைய காரணமாக இருக்கிறது. இந்த வாடகை காசு சேமிப்பை எல்லாம், டி மார்ட், தனது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை குறைந்த விலையில் வழங்க பயன்படுத்துகிறது.

அடுத்ததாக டிமார்ட் சப்ளையர்களுக்குப் பணம் செலுத்துவதில் மிகத் திறமையாக செயல்படுகிறது. பொதுவாக, பொருட்களுக்கான தொகையை 10 முதல் 15 நாட்களுக்குள் செலுத்திவிடுவதால், சப்ளையர்கள் அவர்களுக்குச் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் விளைவாக, டிமார்ட் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்கிவிடுகிறது. அதேபோல் டிமார்ட் ஒரே நேரத்தில் பல கடைகளுக்கு சேர்த்து ஆர்டர் போடுவதால் எல்லா தயாரிப்பு நிறுவனங்களும், டிமார்டிற்கு குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றன.
அதேபோல் டிமார்ட் கடைகளை திறப்பதில் கிளஸ்டர் மாடலை பின்பற்றுகிறது. டிமார்ட் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் பல கடைகளைத் திறப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இது பொருட்களை எடுத்து செல்வதற்கான விநியோகச் செலவுகளைக் குறைக்கிறது . அத்துடன் விளம்பரச் செலவுகளையும் குறைத்து, திறமையாகப் பயன்படுத்த உதவுகிறது. டிமார்ட் பெரியதாக விளம்பரம் செய்யாது. டிமார்ட் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இதையே பின்பற்றுகிறது. அந்த காசை தான் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்துகிறது.
டிமார்ட் கடைகள் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும். பார்க்க மிக ஆடம்பரமாக இருக்காது. ஏசி வசதி இருக்கும்.அதேநேரம் வாடிக்கையாளர்கள் எளிதில் பொருட்களைக் கண்டறியும் வகையில் இருக்கும். டிமார்டில் நுழைந்த உடன், முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வைத்திருக்கும். அத்தியாவசிய பொருட்களை இறுதியில் தான் வைத்திருப்பார்கள். டிமார்டினை பொறுத்தவரை ஒரு குடும்பம் 2000த்திற்கு பொருள் எடுக்கலாம் என்று போனால் 3000, 4000க்கு பொருட்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். எவ்வளவு தான் கட்டுப்பாடாக சென்றாலும், அதிகமாக எடுத்து வருவார்கள். இதுவும் அவர்களின் வெற்றிக்கு காரணமாக உள்ளது.
டிமார்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் 432 கடைகளை வைத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 11 ஊர்களில் தான் கடைகளை வைத்துள்ளது. குறிப்பாக சொல்வது என்றால் சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், மதுரை, சேலம், சூளகிரி, சூலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் ஆகிய ஊர்களில் தான் இருக்கிறது. சென்னை, கோவையில் அதிக கிளைகள் வைத்துள்ளது.
அதேநேரம் டிமார்ட் நிறுவனத்தின் கடைகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அமைந்திருக்கிறது. இந்நிறுவனம் ரூ.14,462.39 கோடி வருவாய் கடந்த 2024/25ம் ஆண்டில் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ₹24,891 கோடி ஆகும். டிமார்ட்டை பொறுத்தவரை பெங்களூர், ஹைதராபாத் போல், சென்னையில் இன்னமும் பெரிய அளவில் இந்நிறுவனம் கடையை திறக்கவில்லை.. விரைவில் அதே அளவு கடையை திறக்கும் என தெரிகிறது. ஏனெனில் சென்னை வேளச்சேரி முதல், செங்கல்பட்டு வரை டிமார்ட்டின் கடைகள் அனைத்திலும் கூட்டம் கடுமையாக இருக்கிறது. ஞாயிறுகளில் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வருவதெல்லாம் ரங்கநாதன் தெருவிற்கு போய் வந்தது போல் இருப்பதாக வாடிக்கையார்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications