பெட்ரோல் விலை உயர்வு பயத்தில் இப்படியெல்லாமா செய்வாங்க.. சென்னை டூ டெல்லி வரை இதே கதை தான்!
உலகில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடைபெறும் ஈரான் மோதல், இந்தியாவின் கார் சந்தையை அமைதியாக மாற்றி வருகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதித்து உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மக்கள் பெட்ரோல் - டீசல் கார்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை (EV) நோக்கி திரும்புகின்றனர்.
ஈரான் போர் காரணமாக உயர்ந்துள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் சப்ளை பிரச்சனைகள் களைந்து இயல்புநிலைக்கு வர 3-4 வருடங்கள் ஆகும் என பல சந்தை கணிப்புகள் வந்துள்ள காரணத்தால் மக்கள் நீண்ட கால அடிப்படையில் தங்களுடைய போக்குவரத்து தேர்வை மாற்றியுள்ளனர்.

எலக்ட்ரிக் வாகன விற்பனை திடீர் உயர்வு
ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் புதிய கார் விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய மாதம் இது 3.5 சதவீதமாக இருந்தது. பதிவு செய்யப்பட்ட மின்சார கார்களின் எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் 68 சதவீதம் அதிகரித்து 22,490 ஆக உயர்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் வேகமான மாற்றத்தை காட்டுகிறது.
எரிபொருள் விலை அச்சம் காரணம்
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா கூறுகையில், நிறுவனத்தின் மின்சார கார் தேவையில் 20 முதல் 30 சதவீதம் வரை எரிபொருள் விநியோக பிரச்சனை காரணமாகவே அதிகரித்துள்ளது என்றார். பெட்ரோல்-டீசல் விலை திடீரென உயரும் அல்லது விநியோகம் நீண்ட காலம் பாதிக்கப்படும் என்ற அச்சம் மக்களை மின்சார வாகனங்கள் நோக்கி தள்ளுகிறது.
இதேபோல் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குநர் அனுராக் மேஹ்ரோத்ரா கூறுகையில், மார்ச் மாதத்தில் மின்சார வாகனங்களுக்கான வாடிக்கையாளர் என்கொயரி முந்தைய இரு மாதங்களை விட 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். பலர் இப்போது மின்சார வாகனத்தையே முதல் விருப்பமாக தேர்வு செய்கின்றனர்.
மின்சார வாகனங்கள் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பதால், நுகர்வோர் இதை நோக்கி திரும்புகின்றனர். உள்நாட்டில் எரிபொருள் விலை இன்னும் பெரிதாக உயராத நிலையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு நடைமுறைக்கு வந்தால் பெரிய அளவிலான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய பாதிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் ஹார்முஸ் நீரிணைப்பு வழியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்தை பாதித்துள்ளது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 87 சதவீதம் வெளிநாட்டு இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்வதால், இந்த போர் பதற்றம் நேரடியாக ஆட்டோமொபைல் சந்தையை பாதிக்கிறது. எனவே எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதிக்காத கார் மட்டுமல்ல, தற்போது பொருளாதார ரீதியாகவும் புத்திசாலித்தனமான தேர்வாக மாறியுள்ளன.
இந்த திடீர் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளன. இந்த மாற்றம் இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications