பெட்ரோல், டீசல் விலை நிற்காது.. டிரம்ப்பால் வெடித்த மிக பெரிய மாற்றம்.. இனிமேல் அவ்வளவு தான்!
சென்னை: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலையானது, தற்போது ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஏறி சாமானிய மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் மூன்றாவது முறையாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த விலையேற்றம் இத்தோடு முடியப் போவதில்லை என்றே வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இதுவரை முடியவில்லை. நேரடியாகத் தாக்குதல்கள் நடக்கவில்லை என்றாலும் ஹார்முஸை சுற்றி பதற்றம் தொடர்கிறது. ஒருபக்கம் ஈரான் மற்ற நாடுகளின் கப்பல்களை விட மாட்டோம் என்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்காவும் ஹார்முஸை முடக்கியுள்ளது. இவ்வளவு சிக்கல் இருந்தாலும் இந்தியாவில் மே 2வது வாரம் வரை பெட்ரோல்- டீசல் விலை உயரவில்லை.

பெட்ரோல்- டீசல் விலை
ஆனால், கடந்த சில நாட்களாக நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. கடந்த மே 15 அன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3 உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மே 19, தற்போது மே 23 அன்றும் விலை மீண்டும் எகிறியுள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3வது முறையாக உயர்ந்துள்ளது.. பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் உயர்ந்தன... இதனால் சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.98க்கு விற்பனையானது. சென்னை மட்டுமின்றி, டெல்லி, கொல்கத்தா மும்பை என எல்லா முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தன.
இதோடு நிற்காது
அதேநேரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இத்தோடு நிற்பது போலத் தெரியவில்லை.. வருங்காலத்தில் இது இன்னும் பலமுறை உயரக்கூடும் என்றே பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு ஹார்முஸ் முடக்கம் முக்கிய காரணம். வளைகுடா மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. வளைகுடா போர் காரணமாக இந்த மிக முக்கியமான கடல்வழிப் பாதை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை $100 டாலரை தாண்டிவிட்டது. போருக்கு முன்பு இதன் விலை வெறும் $70 டாலராக மட்டுமே இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இதனால் இந்தியாவிலும் இந்த விலையேற்றம் எதிரொலிக்கும் சூழல் உருவானது.
சர்வதேச விலை உயர்வு
இந்தச் சர்வதேச விலை உயர்விலிருந்து இந்திய நுகர்வோரைப் பாதுகாக்க மத்திய அரசு கடந்த மார்ச் மாத இறுதியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 வரை குறைத்தது. ஆனாலும், சர்வதேச சந்தையில் விலையேற்றம் தொடர்ந்தது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி ₹1,000 கோடிக்கும் மேலாக நஷ்டத்தைச் சந்தித்து வந்தன.
இதன் காரணமாகவே இப்போது வேறு வழியில்லாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவும் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஓரளவுக்குக் குறைத்தாலும், சந்தை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையே இன்னும் மிக பெரிய இடைவெளி நீடிக்கிறது. இதனால், இன்னும் சில வாரங்களுக்கு இதேபோல விலையை மெல்ல மெல்ல உயர்த்திக் கொண்டே இருக்கும் எனத் தெரிகிறது. பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் வட இந்தியப் பகுதிகளில் சிஎன்ஜி எரிவாயு விலையும் கடந்த 9 நாட்களில் 3வது முறையாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு இயற்கை எரிவாயுவின் தட்டுப்பாடு எல்என்ஜி பயன்பாடு அதிகரித்ததே இதற்குக் காரணமாகும்.
மக்கள் கோரிக்கை
வளைகுடா போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சாமானிய மக்களின் சுமையைக் குறைக்கவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்த்துவதற்குப் பதிலாக மத்திய அரசு கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications