ரூ.5 லட்சம் கோடி இழப்பு.. ரத்தக்களறியான பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீருக்கு என்ன காரணம்?
இந்தியப் பங்குச்சந்தை திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஈரான் - அமெரிக்கா இடையே தொடரும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சிக்கன பேச்சு ஆகியவை சந்தையில் பெரும் பீதியை ஏற்படுத்தின. இதன் விளைவு ஒரே நாளில் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளது.

சென்செக்ஸ் 1200 புள்ளிகள் வீழ்ச்சி
மும்பை பங்குச்சந்தை கடந்த வாரம் சிறிய அளவிலான உயர்வை பதிவு செய்த நிலையில் இன்று மொத்தமும் சரிந்து சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து 76,166 என்ற குறைந்த அளவைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு 23,900 என்ற முக்கிய ஆதரவு நிலையை உடைத்து 23,845 என்ற குறைந்த அளவைப் பதிவு செய்தது.
இதன் எதிரொலியாக மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் 1 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.473.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.468 லட்சம் கோடியாகக் குறைந்தது. சுமார் 5 லட்சம் கோடி அளவிலான முதலீட்டு மதிப்பை காலை வர்த்தகத்திலேயே பதிவு செய்துள்ளது. இன்றைய சரிவுக்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளது.
ஈரான்-அமெரிக்க பேச்சுகள் தோல்வி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் போர் நிறுத்த அமைதி திட்டத்தை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று நிராகரித்ததால், சர்வதேச முதலீட்டு சந்தைகளில் பீதி அதிகரித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுதத் திட்டம் இன்னும் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது என்று எச்சரித்தார். ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் 105 டாலரை தாண்டியது
டிரம்ப் முடிவுகளாலும், ஈரான் நிலைப்பாட்டு காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த 15 நாட்களில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டது, இந்த நிலையில் டிரம்ப் ஈரான் போர் நிறுத்த திட்டத்தை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து 105 டாலருக்கு மேல் வர்த்தகமானது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85-90 சதவீதத்தை இறக்குமதி செய்யும் நிலையில், இந்த விலை உயர்வு இறக்குமதிச் செலவை அதிகரிக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ள. இதனால் பணவீக்கத்தைத் தூண்டி, ரூபாய் மதிப்பை பலவீனப்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மோடியின் அறிவிப்பும்.. பங்குச்சந்தையும்..
பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறும், வீட்டில் இருந்து வேலை செய்யுமாறும், தங்கம் வாங்குவதை ஒத்திவைக்குமாறும், வெளிநாட்டு பயணங்களைக் குறைக்குமாறும் மக்களை சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
இந்த அறிவிப்பு முதலீட்டு சந்தையை நேரடியாக பாதித்துள்ளது. இது சந்தை நிபுணர்களிடையே கூடுதல் கவலையை ஏற்படுத்தியது. ஜியோஜிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைமை முதலீட்டு ஆய்வாளர் வி.கே.விஜயகுமார், "பிரதமரின் சிக்கன அறிவிப்பே சந்தையை இன்று அதிகம் பாதித்தது" என்று கூறியுள்ளார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலர் தேவை அதிகரிப்பால் ரூபாய் மதிப்பு 94.88 என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இது இறக்குமதிச் செலவை மேலும் அதிகரிக்கும்.
தற்போதைய ஏற்ற இறக்கம் தொடரும் என்று சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஈரான் நெருக்கடி, எண்ணெய் விலை மற்றும் பொருளாதார நிலைமை ஆகியவை அடுத்த சில நாட்களில் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் கவனமுடன் இருக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications