இந்திய காய்கறிகளுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடை நீங்கும் - நிர்மலா சீத்தாராமன்
டெல்லி: இந்திய காய்கறிகளுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இந்திய காய்கறிகளுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையை நீக்க , தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாம்பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவைகளை இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியன் இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியக் காய்கறிகள்:
இவ்வாறு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்கள் மற்றும் பாகற்காய், புடலங்காய், கத்தரிக்காய்,சேப்பங்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளில் ஈக்கள், பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறி கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் இவ்வகை காய்கறிகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடைவிதித்தது.

மாம்பழத்தடை நீக்கம்:
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கி கொண்டது.

ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு:
இந்த நிலையில், இந்திய காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ராஜதந்திர முறை:
இதுகுறித்து, "இந்திய காய்கறிகள் சிலவற்றிற்கு ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையை நீக்க இந்தியா அனைத்து வித ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பொருத்தமான துறைகளில் இந்த விவகாரம் எடுத்து கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை:
ஐரோப்பிய யூனியன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை கவனித்து வரும் இங்கிலாந்து வெளியுறவு வர்த்தக செயலர் வின்ஸ் கேபிளுடன் பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

தடை நீக்க வாக்குறுதி:
நான்கு இந்திய காய்கறிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் என்னிடம் வாக்குறுதி அளித்தார்" என்று தெரிவித்தார்.

மற்றவைக்கும் கிடைக்குமா?
இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ள ஒரு சில தினங்களில் இந்த தகவலை நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications