அமெரிக்கா+ இந்திய ரூபாய் மதிப்பு.. தங்கம் விலை அடுத்து என்னவாகும்! ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: கடந்த சில காலமாகவே நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை வாங்க ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இனி வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு ஜெட் வேகத்தில் ஏற தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகு இறங்கவே இல்லை. டிரம்ப் வென்ற போது தங்கம் விலை சற்றே குறைந்த போதிலும் பெரியளவில் குறையவில்லை.

இப்போது மீண்டும் அது உயர்ந்தே வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ 960 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ 7730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ 61,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இதன் பின்னால் உள்ள சர்வதேச காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்:
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், "தங்கம் விலை ஒவ்வொரு மாசமும் எப்படி இருக்கும் என தனித்தனியாக எல்லாம் சொல்ல முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தோம் என்றால் தங்கம் விலை உயரவே செய்யும். ஏனென்றால் இந்திய ரூபாய் மதிப்பு வேகமாகச் சரிந்து வருகிறது.
கடந்த ஓராண்டாக ஒப்பீட்டு பார்க்கும் போது ரூபாய் தரும் லாபத்தை விட டாலர் அதிகமாகவே லாபத்தைத் தருகிறது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள். இப்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 87ஆக இருக்கும் போது வெளியே போகிறார்கள். ஓராண்டு கழித்துப் பார்க்கும் போது இது 92-95ஆக இருக்கும். அப்போது உள்ளே வந்தால் சும்மா 10% வரை அவர்களுக்கு லாபம் கிடைக்கும்" என்றார்.
காரணங்கள்:
சர்வதேச அளவில் இப்போது அமெரிக்க டாலர் தான் ரிசர்வ் கரன்சியாக உள்ளது. ரூபாயை யாரும் ரிசர்வ் கரன்சியாக கருதுவது இல்லை. டாலரை தான் உலக நாடுகள் வர்த்தகம் செய்யப் பயன்படுத்துகின்றன. மேலும், அந்நிய செலாவணியாகவும் வாங்கி சேமித்து வருகிறது. ரூபாய் உள்ளிட்ட மற்ற கரன்சிக்களை எந்தவொரு நாடும் சேமிப்பதில்லை. இதன் காரணமாகவே அமெரிக்காவில் உள்ள மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றுவதால் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும்.
மேலும், நமது நாட்டை பொறுத்தவரை இரண்டு காரணங்களுக்காகத் தங்கம் விலை அதிகரிக்கும். முதல் காரணம் எளிமையானது. சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்கிறது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரிக்கிறது. அதேநேரம் மற்றொரு காரணம் ரூபாய் மதிப்பு சரிவது.
ரூபாய் மதிப்பு:
அதாவது ரூபாய் மதிப்பு சரிவதால் நாம் தங்கத்தை இறக்குமதி செய்ய அதிகப் பணத்தைச் செலவிட வேண்டும். டாலர் அடிப்படையில் தங்கம் அதே விலை தான் என்றாலும் ரூபாய் மதிப்பு சரிவதால், நாம் அதே எடை கொண்ட தங்கத்தை அதிகப் பணம் தந்து வாங்க வேண்டி இருக்கும். இப்படி இரு காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கவலைப்படத் தேவையில்லை
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் மற்றொரு வீடியோவில் கூறுகையில், "ரூபாய் விலை கடுமையாகச் சரிந்து வருகிறது. இன்னும் 5 முதல் 8% வரை ரூபாய் மதிப்பு சரிய வாய்ப்பு இருக்கிறது. நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும். இப்போது ரூபாய் மதிப்பு சரியச் சரியத் தங்கம் விலை அதிகரிக்கும். அதேபோல அடுத்தாண்டு அமெரிக்காவில் மத்திய வங்கி வரி குறைத்தால் தங்கம் விலை வேகமாக அதிகரிக்கும். எனவே, நாம் தங்கத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications